பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நா.பார்த்தசாரதி 351

தந்தையான ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர் 'அந்தப் பெண்களுக்கெல்லாம் திருமணம் செய்து கொடுக்கப் பண வசதி இல்லாததால் சாகிறேன் - என்று கடிதம் எழுதி வைத்து விட்டுச் செத்தார். அநேகமாக இந்தப் பகுதியில் போகிற இரயில்களின் சக்கரங்களில் மனித இரத்தம் படாத நாளே இருப்பதில்லை."

‘'வேலை கிடைக்காத வாலிபர்களும், திருமணமாகாத பெண்களும் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகள் முருகானந்தம். பெரும்பாலான தற்கொலைகளுக்கு இந்த இரு பிரச்சனைகளே காரணம். புல்லினில் வைரப்படை தோன்றுங் கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுவாள் என்று பாரதி பாடினான். இந்தப் பெரிய பிரச்சனைகள் வைரம் பாய்ந்தவையாக மாறினால் 'இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்? என்று ஒவ்வொருவரும் கொதிப்படைய நேரிடும். தெருவின் இருபுறங்களிலும் நடந்து போகிறபோதே துன்பமும், நோயும், மரணமும் தென்படுவதைக் கண்டால் ஒரே ஒரு கணம் புத்தருக்கு உண்டான உணர்வுபோல் 'இந்த உலகத்தை இப்படியே விடக்கூடாது. இவற்றைப் போக்க நிரந்தரமான மருந்து தேட வேண்டு மென்று தனியாத தவிப்பு உண்டாகிறது. ஆனால் அடுத்த வினாடியே அந்தத் தவிப்பு மரத்துப் போய்விடுகிறதே?" -

இருவரும் மனம் நொந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். தலை மயிரிலும் உடம்பிலும் பஞ்சுப் பிசிறுகள் படிந்து சோர்ந்த கோலத்தில் மில் கூலிக்காரப் பெண்கள் தெருவில் கூட்டமாக நடந்து கொண் டிருந்தார்கள். பஞ்சாலை எந்திரங்களின் ஒசை தெருவின் எல்லை வரை குறைவின்றி ஒலித்துக் கொண்டிருந்தது.

'அரவிந்தன் இந்த வட்டாரத்தில் நாள் ஒன்றுக்கு எப்படியும் நாலைந்து தற்கொலைக்குக் குறைவதில்லை. போதாத குறைக்கு இப்போது மூட்டைப் பூச்சி மருந்து என்று சுலபமாகத் தற்கொலை செய்துகொள்ள ஒரு மருந்து வந்து தொலைந்திருக் கிறது.'

'வாழ்வதற்கு மருந்து தெரியவில்லை. அது கிடைக்கிற வரை சாவதற்கு மருந்து தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்' என்று மனம் புண்பட்ட பொருளில் மெல்லச் சொன்னான் அரவிந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/353&oldid=556076" இலிருந்து மீள்விக்கப்பட்டது