பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 குறிஞ்சி மலர்

அவனுடைய மனத்தின் குறிப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளா மல், நகைகளும், பத்திரங்களும் எதுக்குங்க தம்பி? யார் யார், எவ்வளவு வட்டி தரணும், எத்தனை தவணைங்கிறதெல்லாம் தனிக் காகிதத்திலே குறிச்சே வைச்சிருக்கேன் என்றார்.

'அது தேவையில்லை! நகைகளையும் பத்திரங்களையும் கொண்டு வாருங்கள்.'

அவன் குரலின் உறுதிக்கு அஞ்சி அப்படியே செய்தார் கணக்குப்பிள்ளை. யார் யாருடைய அடகு நகை எதுவோ அதை முறையாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, "நீங்களெல் லோரும் இந்தக் கடனுக்கு வட்டி தரவேண்டியதில்லை. அசலைத் தந்தால் போதும், அதையும் இப்போதே என்னிடம் தரவேண்டுமென்று அவசியம் கிடையாது. உங்களுக்கு நான் ஒரு முகவரி தருகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் உங்களால் முடிகிறபோது அந்த முகவரிக்கு நீங்கள் தர வேண்டிய அசலை அனுப்பி இரசீது பெற்றுக்கொண்டால் போதும் என்றான். ஏழைப் பெண்கள் திருமண உதவி நிதிச் சங்கம், மணிநகரம், மதுரை என்ற முகவரியை எல்லோருக்கும் தனித் தனியே எழுதிக் கொடுத்தான். 'தரும தொரையே! நீங்க நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்தினார் அடகு நகையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு முதியவர். சிலர் அவனுடைய கால்களைத் தொட்டு வணங்க ஓடிவந்தார்கள். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டான். கால்களைப் பின்னுக்கு நகர்த்திக் கொண்டு எல்லோரையும் வணங்கி விடை கொடுத்தான். கணக்குப் பிள்ளைக்குத் தலை சுழன்று மயக்கம் வரும் போலிருந்தது. தூணைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். பையனுக்குப் பைத்தியமோ என்று சந்தேகமாகி விட்டது அவருக்கு.

அதன் பின்னும் பத்து நாட்கள் வரை அவன் கிராமத்தில் தங்கினான். தேர்தல் செலவுகளையும், அச்சகத்துக் கடன்களையும் சுமக்க வழியின்றி மீனாட்சி சுந்தரம் திணறுவது நினைவை இறுக்கியது அரவிந்தனுக்கு. பக்கத்துக் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு விலைக்கு எந்தச் சொத்து வருகிறதென்று காத்திருந்தார். அவரிடம் வீடு தவிர மற்ற சொத்துகள் ஐம்பத்தேழாயிரத்துச் சொச்சம் விலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/358&oldid=556081" இலிருந்து மீள்விக்கப்பட்டது