பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 - குறிஞ்சி மலர் வந்திருக்கிறது. மீனாட்சிசுந்தரம் இறந்து விட்டார், உடனே புறப்பட்டு வரவும் - என்று முருகானந்தம் தந்தி கொடுத் திருக்கிறான். வெண்ணெய் திரண்டு வருகிறபோது தாழி உடைந்தது போல் நல்ல சமயத்தில் அந்தப் பெருந்தன்மையாளர் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்று கலங்கினான் அவன். கனவிலும் எதிர்பாராத இந்தச் சாவு அவனை பேரதிர்ச்சியடையச் செய்து விட்டது. மீனாட்சிசுந்தரம் எனக்கு மட்டும் நல்லவர் என்ப தில்லை. எல்லோருக்குமே அவர் நல்லவர் ஊருக்கு நல்லவரின் உயிரை இவ்வளவு அவசரப்பட்டுக் கூற்றுவன் கவர்ந்து கொண்டானே என்று விழி கலங்கி, மனம் கலங்கி, உணர்வுகள் கலங்கி, ஒய்ந்து நின்றான் அரவிந்தன். அவர் சாகக்கூடாது ஆனால் சாகச் செய்துவிட்டார்களே பாவிகள் என்று அவரைக் கவலைப்படச் செய்த பர்மாக்காரரையும், புது மண்டபத்து மனிதரையும் எண்ணிக் கொதித்தான். 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து என்னை ஆளாக்கிவிட்ட எந்தையே! இனி உங்களுக்கு எந்த வகையில் நன்றி செலுத்தப் போகிறேன்? என்று நினைந்து நினைந்து ரயில் மதுரையை அடைகிறவரை வருந்தித் தவித்துக் கொண்டே வந்தான். தனக்கு அந்தப் பெரிய மனிதர் கருணை காட்டி உதவிய சந்தர்ப்பங்களெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனுடைய கண்களில் நீர் நெகிழச்செய்தன.

இரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் முன் ஒரு திருப்பத்தில் நகரமும், அதன் மொத்தமான தோற்றப் பரப்பில் உயர்ந்து தெரியும் கோபுரங்களும், மிக அழகாகத் தென்படும். இன்று அந்தக் கோபுரங்களும், அவற்றின் கீழே மங்கித் தென்படும் நகரமும் தன்னைப் போலவே சோகத் தழலில் வெந்து சோம்பிச்சோர்ந்து துயர்பரவிக் கிடப்பவை போல தோன்றின. நகரமே உயிரும் உணர்வும் செத்துப் போனாற்போல் அவனுக்குக் காட்சியளித்தது. இரயில் நிலையத்தில் நின்றதும், இறங்கி மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு விரைந்தான்.

அந்திமக் கிரியைக்காக வீட்டு வாயிலிலும் திண்ணைகளிலும் தெருவோரங்களிலும் மனிதர்கள் கூடியிருந்தார்கள். முருகானந்தம் வாயிலில் நின்று மேற்கொண்டு நடக்க வேண்டிய ஏற்பாடு களைக் கவனித்துக் கொண்டிருந்தான். சாவால் வாழ்வற்றுப்போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/360&oldid=556083" இலிருந்து மீள்விக்கப்பட்டது