பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 359 உடம்புக்குப் பூவால் பல்லக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. சாவு வீட்டுக்கு அடையாள ஒலிகளாக அழுகுரலும் சங்கும் சேகண்டியும் ஒலித்துக் கொண்டிருந்தன. விழிகளில் நீர்ப் படலம் மறைக்க உள்ளே ஓடினான் அரவிந்தன். கூடத்தில் ஊஞ்சல் பலகையைக் கீழே கழற்றிப் போட்டு, அவரைக் கிடத்தி யிருந்தார்கள். ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது, பேரினை நீக்கிப் பினமென்று பேரிட்ட பின்னும், சாவுக்களையே முகத்தில் வராமல் பெருந்தன்மை துலங்கும் அந்த உருவத்தை எட்டநின்று பார்த்தவாறே பொங்கிப்பொங்கி அழுதான் அரவிந்தன். கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு வெடித்துவரும் துக்க வெள்ளத்தை அடக்க முயன்றான். அடங்காமல் பொங்கிற்று அழுகை கண்முன் மரணத்தைப் பார்க்கும் போது திடீரென்று வாழ்க்கையே ஸ்தம்பித்து நின்றுவிடுகிறாற்போல ஒரு பயம் உண்டாகிறது. நம்பிக்கையாகவும், வெற்றிகளாகவும் எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் வெறும் துக்கத்தின் முத்திரைகளாகத் தெரிந்தன. நெஞ்சு கொள்ளாமல் துக்கம் குமுறிட நீர் தளும்பும் கண்களால் அவருடைய சடலத்தைப் பார்த்துக் கொண்டே நின்ற அரவிந்தன் ஒன்றுமே தோன்றாதது போல், ஒன்றுமே காணாதது போல், ஒன்றுமே உணராதது போல், வசமிழந்த அவசர நிலையில், தோன்றுவதையும், காண்பதையும், உணர்வதையும் சோக இடிக்குப் பறி கொடுத்து விட்டவனாகத் தோன்றினான்.

அவன் தளர்ந்து தவித்தபோதெல்லாம், "பயப்படாதே, நான் இருக்கிறேன். உனக்கு ஒரு கவலையும் வேண்டாம் ' என்று ஆதரவோடு அருகில் வந்து முதுகில் பாசத்தோடு தட்டிக் கொடுத்த கைகளா இப்படி உணரவும் உணர்த்தவும் முடியாத நிலையில் உயிரற்றுக்கிடக்கின்றன? சற்றே கண்கள் சிவந்த நிலையில் அவன் காட்சியளித்தாலும் 'ஏண்டா அரவிந்தா! இரவில் அதிக நேரம் விழித்தாயா, இனிமேல் அப்படிச் செய்யாதே, இராத் துக்கம் இல்லாவிட்டால் உடம்பை உருக்கிவிடும்' என்று அன்புடனே கடிந்து கொண்ட வாயா இப்படி ஈமொய்த்து ஈரம் உலர்ந்து சவக்களை காட்டுகிறது?

நினைக்கநினைக்க மனதிலுள்ள துக்கமெல்லாம் கண் வழிப் பெருகுவது போல் அழுகைதான் பெருகிற்று. எவ்வளவு நேரம்தான் அழுதுகொண்டிருப்பது? இனிமேல் அழுதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/361&oldid=556084" இலிருந்து மீள்விக்கப்பட்டது