பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 363

அவனே தன் கருத்தை மாற்றிக்கொண்டு, முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாதென்று உறுதியாகியிருந்தான் அவன் கருத்து மாறுவதற்குக் காரணமாயிருந்தவை பர்மாக்காரரின் சூழ்ச்சிகள் தாம். இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. உங்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்ற ஆள் பலமும், பண பலமும் என்னிடம் இருக்கின்றன என்று அன்றொரு நாள் தம் மாளிகைக்கு அழைத்துப் போய் அவனை மிரட்டி அனுப்பி இருந்தாரே பர்மாக்காரர்; ஆணவத்தோடு கூடிய அந்த மிரட்டலை அவன் அதற்குள் எப்படி மறந்துவிட முடியும்? அவருடைய கருத்துக்கு இணங்க மறுத்த தன்னை அடித்துக் கீழே தள்ள ஆள் ஏவி விட்டாரே; அதையும் அவன் மறந்துவிடவில்லை. பெட்டி நிறையப் பணமும், மனம் நிறைய அயோக்கியத்தனமும், உடல் நிறைய ஒழுங்கினமுமாகத் திரியும் இம்மாதிரிப் பெரிய மனிதர்களை சரியானபடி முகமூடியைக் கிழித்தெறிந்து சமூகத்துக்குக் காட்டிவிட வேண்டும் என்று முருகானந்தம் ஆவேசமாகக் கொதித்துப் பேசுவது போல் அரவிந்தன் இவர்களைப்பற்றி வாய் அலுக்கக் கண்ட கண்ட இடங்களில் பேசிக்கொண்டு திரிவதில்லை, இவர்கள் கெட்டவர்கள்; அதற்காக இவர்களை நான் அழிக்க விரும்பவில்லை. இவர்களுடைய கெடுதல்களைத்தான் அழிக்க விரும்புகிறேன்' என்று மனத்தில் இவர்களைப் பற்றி ஒரு சிவப்புப் புள்ளி போட்டு நினைவு வைத்துக்கொண்டான்.

மீனாட்சிசுந்தரம் காலமாகி ஒரு மாதத்துக்குப் பிறகு காரியங்களெல்லாம் முடிந்து ஒய்வடைந்தபின் அமைதியான நிலையில் ஒருநாள் திருமதி மீனாட்சி சுந்தரத்தினிடம் அச்சக நிர்வாகம் பற்றிக் கலந்தாலோசித்தான் அரவிந்தன்.

'வழக்கம்போல் எல்லாம் நடக்கட்டும்; புதிதாக நான் என்ன சொல்லப் போகிறேன்? எனக்கு நல்லதைத்தான் நீ செய்வாய். எல்லாப் பொறுப்பையும் ஒப்புக்கொண்டு நம்பிக்கையாய்ச் செய் வதற்கு உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள் எங்களுக்கு? எல்லாம் நீ பார்த்துச் செய்தால் எனக்குத் திருப்திதான்' என்று கூறிவிட்டார் திருமதி மீனாட்சி சுந்தரம். மீனாட்சி சுந்தரத்தைப் போலவே இந்த அம்மாளும் பெருந்தன்மையான மனம் கொண்டவர் என்பதை அரவிந்தன் அறிவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/365&oldid=556088" இலிருந்து மீள்விக்கப்பட்டது