பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 367

திருமணம் நடக்க இருந்த நாளுக்கு அப்பால் பூரணி இலங்கை புறப்பட ஒரு வாரமோ, என்னவோ இருந்தது. வெளி நாட்டுப் பயண அனுமதி வந்த விட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மகா நாட்டிலும், இலங்கையில் பிற பகுதிகளிலும் அவள் சொற்பொழிவாற்று வதற்காகப் புறப்பட இருந்தாள்.

வசந்தாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊரே வியக்கும் அதிசயத் திருமணமாக அமைந்தது அது. திருமண நாளன்று திரும்பத் திரும்ப எப்போது நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சி ஊறும் அனுபவம் ஒன்று பூரணிக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூட்டத்தில் பெண் குழந்தை ஒன்று வாயாடியாகவும், படு சுட்டியாகவும் இருந்தது. மாலையில் முன்புறம் பந்தலில் யாரையோ வரவேற்று உப சரித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். ஸ்டோர் ரூம் சாவி அவனிடம் இருந்தது. மங்கையர் கழகத்துப் பெண்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தாம்பூலப்பை கொடுப்பதற்காக ஸ்டோர்ரும் சாவிவேண்டியிருந்தது பூரணிக்கு. பக்கத்தில் பட்டுப் பாவாடை புரளச் சிரித்துக்கொண்டே நின்ற அந்த வாயரட்டைச் சிறுமியிடம் 'வாசலிலே அதோ உயரமாக, சிவப்பாக, அழகாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே ஒருத்தர், அவரிடம் ஸ்டோர் ரூம் சாவி இருக்கிறது. நான் கேட்டேனென்று போய் வாங்கிக் கொண்டுவா!' என்று அரவிந்தனை அடையாளம் காண்பித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. அந்தச் சுட்டிப் பெண் திருமணத்துக்கு வந்த நாளிலிருந்து அரவிந்தனையும் பூரணியையும் நன்றாகக் கவனித்து வைத்திருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி சிரித்துப் பேசிக் கொள்வதையும், சேர்ந்து கடைகளுக்குச் செல்வதையும் பார்த்து இருவரும் கணவன் மனைவி என்று தானாக நினைத்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. இயல்பாகவே குறும்பும், சுட்டித் தனமும் நிறைந்த குழந்தை அது. பூரணி அனுப்பியதும் சிறிது கூடக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் துள்ளிக் குதித்து வாயிற்புறம் ஒடிப்போய் அங்கே பல பேருக்கு நடுவே நின்று கொண்டிருந்த அரவிந் தனை நோக்கி, 'மாமா மாமா, உங்க வீட்டுக்காரி உங்களைக் கூப்பிடறாங்க. நீங்க அழகா, உயரமா, சிவப்பா இருக்கீங்கன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/369&oldid=556092" இலிருந்து மீள்விக்கப்பட்டது