பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 371

படியினருகில் நின்ற அரவிந்தனின் முகம் அவளுக்கு நினைவு வந்தது. "அரவிந்தன்! உங்கள் சிரிப்பில் அமுதம் இருக்கிறது. அமுதத்துக்குத்தான் உயிரை வளர்க்கும் ஆற்றல் உண்டு' என்று அவன் முகம் நினைவுக்குள் வந்தபோது தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் பூரணி. அரவிந்தனின் இந்தச் சிரித்த முகத்தை நினைவிலிருந்து அழியாமல் வைத்துக் கொண்டாலே போதும். உலகம் முழுவதும் சுற்றிப் புகழ் மாலை சூடிவரும் துணிவை இந்த முகத்தின் நினைவிலேயே நான் அடைய முடியும் என்று எண்ணிக் கொண்டாள் அவள். விரைவாகச் செல்லும் ஊர்திகளில் பயணம் செய்ய நேரும்போதெல்லாம் தன் மனத்தில் தனித்தன்மை வாய்ந்த தூய நினைவுகள் குமிழி குமிழியாகப் பொங்கி மேலெழுவதை அவள் உணர்ந்திருக்கிறாள். சிந்தனைத் துடிப்பும், புதுச்சட்டை போட்டுக் கொண்டிருக்கும் குழந்தையின் உற்சாகமும், பெரிய சாதனைகளை உடனே சாதித்து விடவேண்டும்போல் ஒரு தவிப்பும், வேகமாக வாகனங்களில் உட்கார்ந்து செல்லும்போது தவிர்க்க முடியாமல் அவளுக்கு ஏற்படும். வாழ்க்கையில் அவள் செய்கிற முதல் விமானப் பயணம் இது. எனவே அவளுக்கு அத்தகைய நேரங்களில் ஏற்படும் இயல்பான மன எழுச்சி இன்று இரு மடங்காயிருந்தது.

ஈழநாட்டைப் பற்றியும், யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் சிறப்பைப்பற்றியும் அப்பா எப்போதோ கூறியிருந்த செய்தி களெல்லாம் அவளுடைய நினைவில் பசுமையாகத் தோன்றின. ஆறுமுக நாவலர், குமாரசாமிப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை, கதிர்வேல் பிள்ளை, விபுலானந்தர், பண்டிதமணி கணேச அய்யர் போன்று ஈழநாட்டில் தோன்றித் தமிழ் மொழிக் கும், சைவ சமயத்துக்கும் முடிசூடா மன்னர்களாக விளங்கிய பெரும் புலவர்களை நினைத்துக் கொண்டபோது பயபக்தியினால் மெய் சிலிர்த்தது அவளுக்கு. தமிழும், சைவமும், பழைய நற்பண்புகளும் குன்றாமல் வாழும் ஒரு சூழ்நிலையைக் கான முடிந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பதற்கே பெருமையாக இருந்தது. 'விபுலானந்த அடி களைப்போல் துறவியாகி தமிழுக்கும் சமய ஒழுக்கங்களுக்கும் எனது முழு நேரத்தையும் கொடுத்துத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இளமையில் இருந்தது அம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/373&oldid=556096" இலிருந்து மீள்விக்கப்பட்டது