பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்ததசாரதி 375 யாழ்ப்பாணத்தவரின் விருந்தோம்பல் பற்றி மங்களேசுவரி அம்மாள் சொல்லியிருந்ததில் மிகைபடக் கூறல் சிறிதும் இல்லையென்று பூரணிக்குப் புரிந்தது.

மறுநாள் காலை முதல் தொடங்கி தமிழ் இலக்கிய விழா மூன்று நாட்கள் தொடர்ந்து நிகழ இருந்தது. பெரியதொரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது போல தமிழ் விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதுபெருந் தமிழ்ப் புலவர் ஒருவர் விழாவைத் தொடங்கி வைத்தார். மேடையில் குத்து விளக்கு ஏற்றிவைத்துத் தேவாரம் பாடி விழாவைத் தொடங்கிய அழகே பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தது. விழாப்பந்தல் காணாமல் நெருக்கி அடித்துக் கொண்டு ஆடவரும் பெண்டிரும் கூடியிருந்தனர். சொற்பொழிவு களுக்குப் பெண்களும் அதிக ஆர்வத்தோடு விரும்பி வருவதைப் பூரணி அங்கே கண்டாள். விழாவைத் தொடங்கி வைத்த புலவர், பூரணியைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்பில் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களைப்பற்றிக் கூறினார். பேராசிரியரின் நூல்களையும், ஆராய்ச்சித் திறனையும், பாராட்டிப் பேசினார். கடல் கடந்து வந்து தந்தையின் புகழைச் செவிகளில் கேட்ட போது அவளுக்குக் கர்வமே ஏற்படுவது போலிருந்தது. முதல் நாள் விழாவில் இலக்கிய உணர்ச்சிகள் என்ற பொருளைப் பற்றி அழகாகப் பேசினாள் பூரணி.

'உணர்ச்சிகளை வெறும் அனுபவங்களாக நுகர்ந்து மறந்து விடுகிறார்கள் மனிதர்கள். உணர்ச்சிகளைக் காவியம் செய் கிறார்கள் கவிகள். இன்பமும், துன்பமும், ஏக்கமும் வாழ்க்கை யில் வரும்போது வெறும் உணர்ச்சிகளாக இருக்கின்றன. இலக்கியத்தில் வரும்போது, அழகும் அழிவற்ற தன்மையும் பெற்ற பேருணர்ச்சிகளாகின்றன. வாழ்க்கையில் காணும் உணர்ச்சிகள் காய்ச்சின பால்போல் சிறிது நேரம் அதிகமாக நீடித்தாலும் திரிந்து போகின்றன. இலக்கிய உணர்ச்சிகள் திரட்டுப் பால்போல் உருவாகி நின்று சுவை தருகின்றன. உணர்ச்சிகள் தாம் கவிகளின் வியாபரத்துக்கு முதல்' என்று தொடங்கி எழிலுற வளர்ந்தது அவள் பேச்சு. உதாரணங்களும் நகைச்சுவைக் கதைகளும் தத்துவக் கருத்துக்களுமாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பேசியும் அவர்கள் விடவில்லை. 'முடித்து விடாதீர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/377&oldid=556100" இலிருந்து மீள்விக்கப்பட்டது