பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 குறிஞ்சிமலர்

இன்னும் அரைமணித் தியாலம் (அரைமணிநேரம்) பேசுங்கள்: என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கனகம்மாள் இராச நாயகம் எழுந்து கூறினாள். அவர்கள் அன்பை பூரணியால் மறுக்க முடியவில்லை. இரண்டாம் நாள் விழாவில் 'சங்க இலக்கியச் சாறு" என்பது பற்றியும் மூன்றாம் நாள் விழாவில் ஐம்பெருங் காப்பியங்கள் என்பது பற்றியும் பேசினாள் அவள். கனவுகளில் மிதக்கச் செய்வதுபோல் தான் பேசுகிற நேரத்தில் கூட்டத்தி னரைப் பழைய தமிழ்நாட்டுக்கே அழைத்துச் சென்று விட்டாள் பூரணி. மூன்றாம் நாள் விழா முடிவில் நன்றி கூறும்போது இராசநாயகம் கூறினார்; நாமெல்லாம் ஒளவையாரைப் பார்க்கவில்லை. ஆனால் இவர் ஒளவையாராகி, ஒளவையார் இப்படித்தான் தமிழ் வழங்குமிடமெல்லாம் சென்று அறிவும் அன்பும் வளர்த்தார் என்று நமக்கு வாழ்ந்து காட்டி விடுவார் போலிருக்கிறது' என்று இராசநாயகம் கூறியபோது கூட்டத்தில் கைதட்டல் ஒலி திசைகளை அதிரச் செய்தது. அந்தக் கூட்டத்தில் பூரணிக்குத் தமிழ்ச் செல்வி என்று ஒரு சிறப்புப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை அளித்தார்கள். அந்தப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை முதிய புலவர் ஒருவர் மேடையேறி அளித்த போது மனத்தில் தந்தையை நினைத்துத் தியானம் செய்துகொண்டு அதை அவள் வாங்கிக் கொண்டாள். மாபெரும் கூட்டத்துக்கு முன் ஒளி நிறைந்த மேடையில் பூக்களும், ஊதுவத்தியும் மணக்கும் பொன்னான சூழலில் அந்தப் பொற் பதக்கத்தைக் கையில் வாங்கிக் கொண்டபோது ஒரே ஒரு கணம், அந்த பொற்பதக்கமே கலியிருள் நீக்கும் ஞானக் கைவிளக்காக மாறு கிறாற் போலவும், அந்தக் கைவிளக்கைத் தாங்கிக்கொண்டு அவலக் கவலைகளால் இருண்டு போன மனிதக் கும்பலுக்கு நடுவே தான் சோதிப் பிழம்பாக நடந்து செல்வது போலவும் அவளுக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று. அன்று இரவு மங்களேசுவரி அம்மாள் பூரணிக்குக் கண்ணேறு கழித்தாள். கனகம்மாள் இராச நாயகத்தின் வீட்டில் பூரணியை ஒரு மூலையில் நிறுத்தி உப்பு மிளகாயை எடுத்து மூன்றுமுறை அவள் தலையைச் சுற்றி அடுப்பில் கொண்டுபோய்ப் போட்டாள் மங்களேசுவரி அம்மாள். -

'இதெல்லாம் என்ன அம்மா' என்று சிரித்துக் கொண்டே அந்த அம்மாளைக் கேட்டாள் பூரணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/378&oldid=556101" இலிருந்து மீள்விக்கப்பட்டது