பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 குறிஞ்சிமலர்

அடுத்தாற்போல் யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்காக ஒரு சொற்பொழிவு. இராம கிருஷ்ணா மடத்திற்காக வைத்தீசுவர வித்தியாலயத்தில் ஒரு சொற்பொழிவும் செய்தாள் பூரணி. திருக்கேதீச்சுரத்துக்கும் நல்லூருக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். யாழ்ப்பாணப் பகுதியில் அக்கம் பக்கத்திலிருந்த சிறு ஊர்களுக்கும் தீவுகளுக்கும் சென்று வருவதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. இராசநாயகம் தம்பதிகள் பயணங்களுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நன்றாகச் செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு அருகில் ஊர்க்காவல்துறை என்ற இடத்திலிருந்து எந்திரப் படகு மூலம் நயினார் தீவு' என்ற தீவுக்கும் அவர்கள் போயிருந்தார்கள். அந்தத் தீவுப்பகுதி தான் பழங்காலத்தில் மணிபல்லவமாக இருந்ததென்று சில தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருப்பதாக இராசநாயகம் கூறினார். அந்தத் தீவின் தனிமையான சூழ்நிலையும் சூழ்ந்திருந்த கடற்பரப்பும் பூரணியைக் கவர்ந்தன. கால வெள்ளத்தின் அள்ந்தரிய முடியாத ஆழத்துக்கடியில் எப்போதோ பழம் பிறவியில் துறவுக் கோலத்தோடு சடைமுடி சுமந்து அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டும், புத்தர் பெருமானின் பொன்னடிகளை மனத்தில் ஏந்திக் கொண்டும், அந்தத் தீவின் மணற்பரப்பில் தானே மணிமேகலை யாகச் சுற்றித் திரிந்திருப்பதுபோல் பூரணிக்குப் பொய்ம்மாயப் புத்துணர்ச்சி ஒன்று உண்டாயிற்று. மணிமேகலையைப் பற்றி எண்ணிய போது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவு களில் ஆழ்ந்து மெளனமாக அழவேண்டும் போலப் பைத்தியக் காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக்கடற்கரைப்பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டார்கள். யாழ்ப்பாணத்து அன்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு திருகோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு முதலிய பார்க்க வேண்டிய இடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/380&oldid=556103" இலிருந்து மீள்விக்கப்பட்டது