பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 குறிஞ்சிமலர்

நிறைந்திருந்தன. மலைநாட்டு ஊர்களில் சுற்றிவிட்டு, அவர்கள் மறுபடியும் கொழும்பு திரும்பியதும், இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பகுதியில் பூரணியை அழைத்து இரண்டு சொற்பொழிவுகள் ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள்.

'வந்து நாளாகிவிட்டது அம்மா ஊர் திரும்ப வேண்டும். தேர்தல் வேலைகளுக்காக அவரும் உங்கள் மாப்பிள்ளையும் தனியாக அலைந்து கொண்டிருப்பார்கள். நாம் விரைவில் ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அடுத்தாற்போல் கிழக்கு ஆசியப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கல்கத்தாவுக்கு வேறு போயாக வேண்டும் எனக்கு ' என்று பூரணி மங்களேசுவரி அம்மாளிடம் ஊர் திரும்ப அவசரப்படுத்தினாள்.

'ஏன் தான் இந்தத் தேர்தல் வம்பை இழுத்துக் கொண்டு திணறுகிறாயோ? அரவிந்தன் எவ்வளவோ நல்ல பிள்ளை. இதில் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறாரென்று எனக்கே விளங்க வில்லை பூரணி? மீனாட்சிசுந்தரம் போன பின் தேர்தல், அரசியல் வம்புகளிலிருந்து உனக்கு விடுதலை கிடைத்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்னவோ அரவிந்தன் வற்புறுத்துகிறதாகச் சொல்கிறாய்?"

'இல்லை, அம்மா! அவருக்கும் இதெல்லாம் பிடிக்காது. 'என்னைத் தேர்தலில் நிறுத்துவதற்கு இணங்கச் செய்யவேண்டும்' என்று முதன்முதலாக மீனாட்சிசுந்தரம் அவரிடம் வேண்டிக் கொண்டபோது அவர் கடுமையாக அதை எதிர்த்திருக்கிறார். ஆனால் இப்போதோ சூழ்நிலை வேறு மாதிரி ஆகிவிட்டது. அவரே இந்தத் தேர்தல் முயற்சியைக் கைவிட முடியாத இன்றியமையாத நிலை ஏற்பட்டு விட்டது என்று தொடங்கிப் பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் செய்கிற சூழ்ச்சி களைப் பற்றியும் சொன்னாள் பூரணி. மறுநாள் கொழும்பி லிருந்தே அவர்கள் விமானம் மூலம் ஊர் திரும்பிவிடத் தீர்மானம் செய்து கொண்டார்கள். புறப்படுவதற்கு முதல்நாள் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் சில பொருள்கள் வாங்கிக்கொள்வதற்காக கடைத் தெருவுக்குப் போயிருந்தார்கள். பூரணிக்கும், அவள் தம்பி, தங்கைகளுக்கும், தன் பெண்களுக்குமாக இலங்கையில் கிடைக்கும் உயர்தரத் துணிமணிகள் நிறைய வாங்கிக்கொண்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/382&oldid=556105" இலிருந்து மீள்விக்கப்பட்டது