பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 37 விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். 'இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!' என்று விடை கொடுக்கிறதுபோல் கைகூப்பினார். அந்தக் கை கூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக் கொண்டிருக்கக் கூடாது. போய்விடு' என்பது அர்த்தம் போலும்!

பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்து சலித்துப் போய், 'அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி' என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். 'அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில் பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு எழுதுகிறவன் வாயில் மண்போடுகிறார்களே என்று வேதனை யோடு கூறுவார் அப்பா. புது மண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோவில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவின் இரண்டு ஒரமும் பழைய பூட்டுசாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகி விட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப் பும் அழகும் வந்து விடும். பழைய காலத்தில் இதற்கு அந்திக் கடைவீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.

அந்தக் கோபுரத்தையும் பெரிய கோவிலையும், ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றி விடமுடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவ கோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூல வீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/39&oldid=555763" இலிருந்து மீள்விக்கப்பட்டது