பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 417 மனங்களிலேயே வாழவிடுங்கள் என்று மங்களேசுவரியம்மா ளிடம் தத்துவம் பேசுகிறான். அவள் மட்டும் என்னவாம்? குறிஞ்சிப் பூப்பதுபோல் அபூர்வமாகத் தன் மனத்தில் அந்தக் கம்பீரம் பூக்கும் போது, ஆசைகளும் பாசங்களும் நிறைந்த சிறிய வாழ்வை மறந்து ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவர்களுமாக உறங்கித் தளர்ந்து இருளில் மூழ்கியிருக்கும் தமிழினத்து மக்களின் நடுவே ஒளிவிளக்கேற்றி அருள்நடை நடக்கும் வாழ்வையல்லவா அவள் உணர்கிறாள். அந்த வாழ்வின் நினைவு குறிஞ்சிபோல் அரிதாய் மனத்துள் உயரமான இடத்தினதாய்ப் பூக்கும்போது அவள் கண்களில் நீர் மல்கி விடுகிறதே! கருத்தில் தெய்வீகம் மணக்கிறதே! தான் மட்டுமே உணர முடிந்ததும், பிறர்க்கு உணர்த்த முடியாததுமான இந்த உணர்வுக்கு என்ன பெயர்?

திருப்பரங்குன்றத்தில் கமலாவின் வீட்டில் அந்த அனுபவம் ஏற்பட்ட சிறிது நாழிகை நேரத்தில் இத்தனையும் எண்ணித் தவித்தது பூரணியின் உள்ளம். அவள் குடியிருந்த வீட்டின் சாவியும் கமலாவின் தாய் வசம்தான் கொடுத்து வைக்கப்பட்டி ருந்தது. வெகு நாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததனால் சாவியை வாங்கிக்கொண்டு போய்த் திறந்து பார்த்துவிட்டு வந்தாள் பூரணி.

“எதற்காக இங்கு ஒரு வீட்டைப் பூட்டிப் போட்டுக் கொண்டு தண்டத்துக்கு வாடகை கொடுக்கிறாய்? பேசாமல் எல்லாவற்றை யும் ஒழித்துக் கொண்டு மதுரைக்கே வந்து விடு நம் வீட்டு மாடி முழுவதும் உனக்கு விட்டுவிடுகிறேன்' என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி அதற்கு உடனடியாக இணங்கிவிடவில்லை. 'பார்க்கலாம் அம்மா! இப்போது அவசரமில்லை' என்று கூறினாள்.

தம்பி சம்பந்தனும் தங்கை மங்கையர்க்கரசியும் மங்களேசுவரி அம்மாள் வீட்டிலேயே தங்கிப் படித்துக் கொண்டிருந்ததனால் செல்லத்தைப்போல் ஏறக்குறைய அவ்வீட்டுக் குழந்தைகளாகவே ஆகியிருந்தார்கள். மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்திலேயே அரவிந்தனோடு இருந்து வந்தான். இவற்றையெல்லாம் சிந்தித்துத் தீர்மானமாய் முடிவு செய்து கொண்ட பின்புதான் அந்த அம்மாள் பூரணியிடம் அக் கேள்வியைக் கேட்டாள். -

கு.ம - 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/419&oldid=556142" இலிருந்து மீள்விக்கப்பட்டது