பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 433

அண்ணா நீங்கள் பேசுங்களேன்' என்று வசந்தா வேண்டிக் கொண்டபோது அரவிந்தன் மறுத்து விட்டான். 'இங்கு நடந்திருப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிப் போன இடத்தில் வீண் மனக்குழப்பத்தோடு இருக்கும்படி செய்து விடாதே. எல்லோரும் நலம்' என்று சொல்லி டெலிபோனை வைத்துவிடு, நான் ஒன்றும் பேசவேண்டாம்' என்றான் அவன்.

பூரணியின் தம்பி திருநாவுக்கரசுக்கு வேறு இடங்களில் சரியான வேலை கிடைக்காததனால் முருகானந்தம் தன் தையற்கடையிலேயே அவனை வைத்துக்கொண்டுவிட்டான். நாலைந்து நாட்களில் அரவிந்தனும் மனம் தேறி வெளியே நடமாடத் தொடங்கியிருந்தான். பொதுத்தொண்டுகளில் பழைய ஆர்வத்தோடும் துடிதுடிப்போடும் ஈடுபட்டு வேதனைகளை மறக்கலானான் அவன். மணி நகரத்திலிருந்த ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிச் சங்கத்திலிருந்து திருமணம் செய்யப் பணமில்லாமல் வயது வந்த பெண்களை வைத்துக்கொண்டு திண்டாடும் பல ஏழைப் பெற்றோருக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தான். பஸ் நிலையத்துக்குப் பக்கத்திலும் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியிலும் உள்ள நடைபாதைவாசிகளாகிய அநாதைகளுக்கு விடிவு உண்டாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று நண்பர்களைக் கலந்து ஆலோசனை செய்தான். 'நாகரிகப் பெண்களும், குழந்தைகளும், பிச்சையெடுக்க வருகிற இழி நிலையைப் போக்க உடனே ஏதாவது வழி செய்தாக வேண்டும்’ என்று முனிசிபல் கவுன்சிலராகிய தன் நண்பர் ஒருவரைக் கொண்டு நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தான். பொன்னகரத்து உழைப்பாளி மக்களின் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசத் திருக்குறள் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இருந்தது. அரவிந்தனுக்கே தெரியாமல் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததனால் முருகானந்தம் அவனுடன் அதிகம் அலைய முடியாமல் இருந்தது. "எங்கே அலைகிறாய் முருகானந்தம்? ஆளையே பார்க்க முடியவில்லையே?' என்று அரவிந்தன் கேட்டதற்குத் தையல் கடையைப் பெரிதாக்கி விரிவு செய்யும் காரியங்களுக்காக அலைவதாகப் பொய் சொல்லி வைத்திருந்தான் முருகானந்தம்.

கு.ம - 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/435&oldid=556158" இலிருந்து மீள்விக்கப்பட்டது