பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 குறிஞ்சிமலர்

எப்பாடுபட்டாவது தேர்தலில் பர்மாக்காரரின் ஆளுக்குத் தோல்வியும் பூரணிக்கு வெற்றியும் கிடைக்கச் செய்துவிட வேண்டுமென்ற வைராக்கிய வெறியுடன் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன். பொய்யின் முகத்தில் கரி பூசிவிட வேண்டுமென்று அவன் சபதம் செய்து கொண்டிருந்தான். கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாளோ நாலாம் நாளோ, பூரணி அங்கிருந்து விமானத் தபாலில் அரவிந்தன் அச்சக முகவரிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தாள். அச்சக ஊழியன் அந்தக் கடிதத்தை முருகானந்தத்திடம் தையல் கடையில் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான். அன்று அரவிந்தன் தன்னுடைய கிராமத்துக்குப் போயிருந்ததனால் மறுநாள் மாலை அவன் திரும்பிய பின்பே பூரணியின் கடிதத்தை முருகானந்தம் அவனிடம் சேர்க்க முடிந்தது.

கடிதத்தின் உறையைப் பிரித்ததும், உள்ளே கம்மென்று சண்பகப் பூ மணம் எழுந்து பரவியது. ஆறேழு பக்கம், எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த கடித மடிப்பின் நடுவே இருந்து உலர்ந்து பாடமாகிப் படிந்த சண்பகப் பூக்கள் இரண்டும் உதிர்ந்தன. பூரணியே தலைநிறையச் சண்பகப் பூ வைத்துக் கொண்டு மணக்க மணக்கப் பக்கத்தில் வந்து நிற்பதுபோல் அரவிந்தனுக்கு அப்போது ஒரு பிரமை உண்டாயிற்று. வாடி ஒட்டிச் சப்பட்டையாய்ச் செப்புத் தகடு போல் படிந்திருந்த அந்தப் பூக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டபின் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானான்.

அன்பிற்கினியவருக்கு, பூரணியின் வணக்கங்கள். இப்படி ஒரு பெரிய கடிதத்தை இலங்கைக்குப் போயிருந்தபோதே உங்களுக்கு எழுதவேண்டு மென்று நினைத்திருந்தேன். அங்கு ஒய்வே இல்லாமற் போய் விட்டதனால் அதற்கு வாய்க்கவில்லை. இப்போது இங்கே வாய்க்கிறது. மனத்தில் நிறைந்திருக்கும் உற்சாகமான அனுபவங் களையும் புதுமைகளையும் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்தக் கடிதத்தின் உறையைப் பிரித்தவுடன் உங்களுக்குப் பிரியமான் சண்பக மணத்தை நுகர்ந்திருப்பீர்கள். நேற்று இங்கே ஒரு கூட்டத்தில் அபூர்வமாகச் சண்பகப் பூமாலை போட்டார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/436&oldid=556159" இலிருந்து மீள்விக்கப்பட்டது