பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-நா.பார்த்தசாரதி 443 மாடிக்குப்போய் சிறிதுநேரம் படித்துக்கொண்டிருந்து விட்டு மணி எட்டரை ஆவதற்கிருந்தபோது கீழே இறங்கி வந்து வானொலிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தைத் தவிர எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். வானொலிப் பெட்டியைச் சுற்றி எல்லோரும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

பூரணியின் அந்த வானொலிப் பேச்சில் ஒரு பகுதி அரவிந்தனைப் புல்லரிக்கச் செய்தது.

'இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப் போகிறது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதற்கு இறையுணர்வு தேவையில்லை இரையுணர்வே போதும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனத்தைக் கோவிலாக்கி நினைவுகளில் தெய்வம் நிலைக்க வாழ்ந்தவர்கள் நிறைந்த சமயம் நம்முடையது. ஊன் பழித்து உள்ளம் புகுந்த என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்றுதான் நம்முடைய மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். உணர்வுகளாலும் எண்ணங்களாலும் தான் மெய்யாக வாழ்கிறோம். வாடகைக் குடியிருப்பு மாதிரித் தேகம் நமக்குச் சொந்தமில்லாதது. தத்துவக் கண்கொண்டு பார்த்தால் நம்முடைய உடம்பு ஒரு பெரிய புண். தினசரி நீராடும்போது புண்ணைக் கழுவுகிறோம். வியர்வைதான் சீழ், வியர்வையும் அழுக்குமாகக் கற்றாழை நாற்றமும், முடை நாற்றமும் நாறுகிறதே, அதுதான் புண்ணின் நாற்றம். சோறு, கறி, நீர் எல்லாம் உடம்பாகிய புண்ணுக்குச் செலுத்துகிற மருந்துகள். புண்ணைக் கழுவி மருந்திட்டுத் துணியால் கட்டுப் போடுவார்களே, அதுபோல்தான் வேட்டி சட்டை அணிந்து கொள்வது. ஊண் பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய.... ' என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதில் இத்தனை தத்துவமும் அடங்கியுள்ளது; கீழைநாட்டுச் சமயங்கள் பக்தி செலுத்துவதற்கு மனம்தான் இடம் என்று கருதியவை. ஆனால் வறுமையும் வாழ்வுப் போட்டிகளும் மிகுந்துவிட்ட இந்தக் காலத்தில் இரையுணர்வுதான் எங்கும் நிறைந்திருக்கிறது. இறையுணர்வைக் காணோம். ஒழுக்கம், நாணயம், பண்பு ஆகிய பொது வாழ்க்கையின் நியாயங்கள் பறிபோகாமற் காக்கும் ஒரே வேலி இறையணர்வுதான், மனம் வளர்வதற்கு மருந்தும் அதுதான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/445&oldid=556168" இலிருந்து மீள்விக்கப்பட்டது