பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 445

போய்ச் சன்னலருகே விழுந்திருந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். விளக்கைப் போட்டுக் கொண்டு வராந்தாவில் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். தேர்தல் செய்திகளும் அடிதடி வம்புகளும் மூலைக்கு மூலை நிரம்பியிருந்தன. செய்தித்தாளில் படித்தால் மனம் தூய்மையும் நிம்மதியும் அடைகிற விதமான செய்தியாக ஒன்றும் தெரிய வில்லை. செய்தித் தாளின் நடுப்பக்கத்தில் மனம் அதிர்ந்து கலக்கமுறும்படியான இரண்டு செய்திகளையும் அரவிந்தன் கண்டான். மீனாட்சி அச்சகத்திலிருந்து நடிகர் நடிகையர்களின் கவர்ச்சிகரமான படங்களைத் தாங்கிக்கொண்டு சினிமாச் சுரங்கம் என்ற பத்திரிகை ஒன்று வெளிவரப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைக் கண்ணுற்றதும் அரவிந்தன் வேதனையுற்றான். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மிக உயர்ந்த நூல்களெல்லாம் மலிவு விலையில் வெளியிட்ட இடத்திலிருந்தா இப்படி ஒரு பத்திரிகை வெளியாகப் போகிறது. மீனாட்சி சுந்தரம் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் காலமானபின் இப்படியா ஆகவேண்டும் இந்த அச்சகம்? இதற்கு எல்லாம் நான் அங்கிருப்பது இடையூறாக இருக்குமென்றுதானே என்னைப் பிரித்து வெளியேற்றியிருக்கிறார்கள்? சே! சே! எவ்வளவு கீழ்மைக் குணம் இவர்களுக்கு?’ என்று எண்ணிப் புண்பட்டான். 'நான் வருத்தப்பட்டு இனி ஆவதற்கு என்ன இருக்கிறது? வருத்தப்படுவதற்குத்தான் எனக்கு உரிமை ஏது? என்று நினைத்து அதை மறந்து விட முயன்று கொண்டே அடுத்த பக்கத்தைப் புரட்டினான் அவன்.

அடுத்த பக்கத்தில், 'விஷக் காய்ச்சலால் கிராமத்தில் பலர் சாவு என்ற தலைப்பின்கீழ் பிரசுரமாகியிருந்தசெய்தி ஒன்றில் அவன் பார்வை பதிந்தது. மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலுள்ள ஊர் ஒன்றில் அந்தக் கொடுமைக் காய்ச்சல் பரவி ஏழை மனிதர்களைப் பலி கொண்டு தொடர்கிற செய்தி அவனை வாட்டியது. அப்போதே அந்தக் கிராமத்துக்கு ஓடிப் போய்த் தன்னாலான சிறிய உதவிகளையாவது ஏழைகளுக்குச் செய்ய வேண்டுமென்ற துடிப்பு அரவிந்தனுக்குத் தவிர்க்க முடியாமல் உண்டாயிற்று. முருகானந்தமும் வசந்தாவும் எழுந் திருந்தபின் அவர்களிடம் சொல்லிக் கொண்டு போவதென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/447&oldid=556170" இலிருந்து மீள்விக்கப்பட்டது