பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 455

தோடு உங்கள் உடம்பையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க (வேண்டாமோ? எப்போது உங்களுக்குக் காய்ச்சல் வந்து விட்டதோ, உடனே புறப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டும். எந்தவிதமாவது ஆகட்டும் என்று அங்கே இருந்தால் எப்படி?” என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைக் கண்டித்துக் கடிந்து கொண்டாள்.

அன்றிரவு ஒருவருக்கும் அந்த வீட்டில் உறக்கம் இல்லை. மறுநாள் காலையில் அரவிந்தனுக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. இரவு அவன் மட்டும் நன்கு அயர்ந்து உறங்கியிருந்தான். ஆனால் மாலையில், மறுபடியும் காய்ச்சல் நூற்றிரண்டு டிகிரிக்கு ஏறிவிட்டது. டாக்டர் வந்து போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் மறுபடியும் உச்ச நிலைக்கு ஏறிக்கொள்வதுமாக ஒன்றும் உறுதி சொல்ல முடியாமல் இருந்தது. அந்த வீட்டில் ஒருவர் மனத்திலும் நிம்மதி இல்லை. ஒருவர் முகத்திலும் ஒளி இல்லை. அரவிந்தனுடைய காய்ச்சல் இறங்குகிற நேரத்தில் அவர்கள் கவலையும் சிறிது இறங்கியது. மாலையில் 'டெம்பரேச்சர் ஏறுகிறபோது அவர்கள் கவலையும் ஏறியது. பூரணி அரவிந்தனின் கட்டிலருகிலேயே அமர்ந்து பணிவிடைகள் புரிந்துகொண்டிருந் தாள். அவளுடைய கண்களில் நீரும் மனத்தில் வருத்தமும் நீங்கிய நேரம் சிறிதும் இல்லை.

பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டு விட்டாள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதைப் பற்றி யாருமே நினைக்க வில்லை. முருகானந்தம்கூடத் தேர்தல் வேலைகளாக அலைவதை நிறுத்திவிட்டான். அரவிந்தன் உடல்நிலை தேறி எழுந்தால் போதும் என்ற ஒன்றுதான் அப்போது அவனுடைய கவலையா யிருந்தது. ஏற்கனவே தன்னால் தூண்டிவிடப் பெற்று அந்தந்தப் பகுதியில் தேர்தலுக்கு வேலைசெய்து கொண்டிருந்தவர்களை மட்டும் முருகானந்தம் தடுக்கவில்லை. தானாக நடப்பதைத் தடுப்பானேன் என்று வாளாவிருந்தான். அரவிந்தன் உடல் நலம்பெறவேண்டுமென்று திருப்பரங்குன்றத்து முருகன் கோவிலிலும், மதுரை மீனாட்சி கோவிலிலும் பழைய சொக்கநாதர் கோவிலிலும் நாள் தவறாமல் பிரார்த்தனைகளும் அர்ச்சனைகளும் நடத்திக் கொண்டிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். சின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/457&oldid=556180" இலிருந்து மீள்விக்கப்பட்டது