பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 குறிஞ்சிமலர்

தேடிக்கொண்டு வந்து ஒட்டுச் சாவடிகளில் சேர்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அதில் இரகசியம் என்னவென்றால் சில இடங்களில் பர்மாக்காரருடைய காரில் முருகானந்தத்தின் மனிதர்களே சவாரி செய்து ஒட்டுச் சாவடிக்குப் போய்ப் பூரணிக்கு ஒட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! புது மண்டபத்து மனிதருக்குப் பர்மாக்காரர் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்க்கும்போது வெற்றி அவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இருப்பதாகத் தெரியவில்லை! ஊரிலும் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள். முருகானந்தம் மட்டும் நம்பிக்கை இழக்காமல் உற்சாகமாகவே இருந்தான். பெரும் போர் நிகழ்ந்து ஒய்ந்த களம்போலத் தேர்தல்நாள் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும் ஆவல் மட்டும் நகர் முழுவதும் தேங்கி நின்றது. தேர்தலன்று இரவு முருகானந்தம் வீடு திரும்பியபோது அரவிந்தனிடம் தன் நம்பிக்கையைத் தெரிவித்தான். அதைக் கேட்டு அரவிந்தன் நகைத்தான். 'பார்க்கலாம்! நீ சொல்லுகிறபடி பூரணிக்கு வெற்றி கிடைப்பதாயிருந்தால் அது மாபெரும் இலட்சிய வெற்றியாக இருக்கும்' என்றான். அரவிந்தனுடைய உடல்நிலை அன்றும் மறு நாளும் காய்ச்சல் ஏறாமல் சுமாராகவே இருந்தது.

மறுநாள் பூரணியை அருகில் உட்காரச் செய்து பிரயாண அனுபவங்களைக் கூறச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தான் அவன். 'டேப்ரிகார்டர் போடச் சொல்லி அவளுடைய பேச்சுக்களை மீண்டும் அவள் அருகில் இருக்கும்போதே கேட்டு மகிழ்ந்து பாராட்டினான்.

'பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிற்று என்று முடியுமே, அந்தப் பாட்டை ஒரு தடவை நீயே நேரில் பாடு! உன்னை எதிரில் வைத்துப் பார்த்துக்கொண்டே அந்தப் பாட்டைச் செவிகள் குளிரக் கேட்க வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது" என்று குழந்தையைப் போல் வேண்டினான். அவள் அவன் விருப்பப்படியே அதைப் பாடினாள். பாடி முடித்துவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்த போது அங்கே கண்களில் நீர் தளும்பி நிற்பதைக் கண்டாள்.

'ஏன் அழுகிறீர்கள் இப்படி? சிறு குழந்தையல்லவே நீங்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/460&oldid=556183" இலிருந்து மீள்விக்கப்பட்டது