பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 குறிஞ்சிமலர்

சுற்றுவதென்று ஏற்பாடு ஆயிற்று. ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன.

திருமண ஊர்வலங்களுக்கு வழக்கமாகப் போகும் இரட்டை வெண்புரவிச் சாரட்டு மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்று அம்மன் சந்நிதி வாயிலில் அழகாய் நின்றது. பாண்டு வாத்தியக் குழுவினரின் உற்சாக முழக்கமும் இரட்டை மேளமும் அற்புதமாய் ஒலித்தன. திருவிழாக் கூட்டம் போல் மக்கள் வெள்ளம் கூடிவிட்டது. முருகானந்தம் கையில் ஒரு பெரிய தும்பிக்கை ரோஜா மாலையோடு ஊர்வலத்தின் முன் பகுதியில் நின்றான். அருகில் வேறு பலரும் மாலைகளோடு நின்றார்கள். பூரணியை வாழ்த்தியும், தேர்தல் வெற்றியைப் பாராட்டியும் வாழ்த்தொலிகள் ஒலித்தன. ஊர்வலம் ஒலிவெள்ளமாய் எழில் வெள்ளமாய் மெல்லமெல்ல நகர்ந்தது. தெற்குக் கோபுர வாயில் வழியாகச் சுற்றி மேலக்கோபுரத் தெருவில் புகுந்து தானப்ப முதலித் தெருவில் திரும்பியது.

அழகாக எடுப்பாக நீண்டு அகன்ற அலங்காரச் சாரட்டை இழுத்துக்கொண்டு கம்பீரமான வெண்புரவிகள் சென்றன. வானத்தில் வாணவேடிக்கை ஒளிக்கோலங்கள் பரப்பியது. மகிழ்ச்சி என்ற பேருணர்வு ஒளி, ஒலி வடிவமாகவே மாறி விட்டதுபோல் பாண்டு வாத்தியக் குழு, மனமும் நடக்கும் கால்களும் குதூகலத் துள்ளல் பெறத்தக்க அற்புதமானதொரு பண்ணை முழக்கியது. நாயனக்காரர்களும் இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். கூட்டமெங்கும் பூக்களின் மணம், செவிகள் எல்லாம் இசைகளின் ஒலி, வீதியின் இருபுறத்து வீடுகளிலும் ஊர்வலத்தைக் காண முந்தும் மலர்ந்த முகங்கள். மங்களேசுவரி அம்மாளின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊர்வலம் வீட்டு வாயிலை அடைவதற்குச் சிறிது தொலைவே இருந்தது. இதோ வீட்டை அணுகி விட்டார்கள். ஐயோ! அந்த மகிழ்ச்சியினிடையே இதென்ன குரல் 'நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!' என்று தலைவிரி கோலமாக அழுதுகொண்டே ஓடிவந்தாள் வசந்தா. முருகானந்தத்தின் கையிலிருந்த மாலை நழுவியது. மனமும் உடம்பும் நடுங்கின. பாண்டு மேளம், வாழ்த்தொலிகள் எல்லாம் திடீரென்று வீதியே ஊமையாகி விட்டதுபோல் ஒலியவிந்து நின்றன. ஒரே ஒரு விநாடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/464&oldid=556187" இலிருந்து மீள்விக்கப்பட்டது