பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 465

மெளனமாக நின்று கொண்டிருந்தவர்கள் கைகளில் இருந்து பெரிய பெரிய பூ மாலைகளை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து அரவிந்தனுடைய உடலில் சூட்டி அழகு பார்த்தாள். உயிரோடு வாழும்போதே இப்படி ஒரு மண மாலையை அவனுடைய கழுத்தில் அவள் சூட்டியிருக்க வேண்டும். எல்லார் கையிலுமிருந்த எல்லா மாலைகளையும் வாங்கிச் சூட்டி விட்டு நின்று அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இப்படி நினைத்தபோது மீண்டும் கண்களில் நீர் பனித்தது அவளுக்கு. பல நாட்களுக்கு முன் எப்போதோ மங்கையர்கழகத்தில் தான் உள்ளமுருகிப் பேசிய திலகவதியின் பேச்சு இப்போது அவளுக்கு நினைவு வந்தது. திலகவதியைப்போல் மனத்தால் மட்டும் வாழ்ந்து மணம் பரப்பும் வாழ்வுதான் தனக்கும் விதியால் நேரப்பட்டிருக்கிறதென்று அப்போது அவளுக்குத் தெரியாது. 'திலகவதியின் கலிப்பகை சோழ நாட்டுப் போரில் மாண்டான். என்னுடைய அரவிந்தனை வாழ்க்கைப் போரே மாய்த்து விட்டது' என்று நினைத்த போது மேலும் துயரம் கொதித்தது. அவள் மனத்தில் உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்ந்த திலகவதி போன்ற புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும் என்று தந்தை சொல்லிக் கொடுத்திருந்ததை நினைத்த போது உடல் புல்லரித்தது அவளுக்கு. 'எனக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரில் தம்பி இருக்கிறான். உடன் பிறந்த தம்பிகளையும் தங்கைகளையும் காத்து வாழ வைப்பதற்காக நானும் வாழவேண்டும் என்று அவள் உள்ளத்தில் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. சிறு பிள்ளைப் பருவத்திலிருந்தே திலகவதியார் கதை தன் மனத்தைக் கவர்ந்து உருக்கி வந்திருந்திருப்பதைப் படிப்படியாக நினைத்துக் கண் கலங்கினாள். அவள் நெஞ்சை உணர்வுகள் சூழ்ந்து கொண்டு. தேள்களாய்க் கொட்டின.

சிறிது நேரத்திற்குப்பின் அவள் கண்களில் மீண்டும் ஒளி தென்பட்டது. அழுகை நின்றது. அரவிந்தனின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். குனிந்த தலை நிமிராமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேறிப் பக்கத்து அறைக்குள் புகுந்தாள். உள்ளே ஏதோ உடைபடுகிற ஓசை கேட்டது. - .

கு.ம - 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/467&oldid=556190" இலிருந்து மீள்விக்கப்பட்டது