பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - குறிஞ்சிமலர்

செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.

'வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்தச் சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வரச் சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்து விட்டால், அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆக வேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக் கொண்டு செய்!”

'வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்படமுடியும் கமலா; ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லா வசதிக் குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்'. பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச்சமாதானம் சொல்ல முடியவில்லை.

'உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா! ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித்தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணிர் பட்ட பாடு. நான் என்ன, உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா? சாதாரண விவசாயியின் பெண் என்னை விட்டுவிடு. கரையில் ஒரு ஸ்டோர் இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்து விட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற் போல் நடந்து செல்லச் சமயமே வாய்த்ததில்லை."

நான் வரத் தயார், உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது." -

"தாராளமாய் அனுப்புவார்கள். இப்பொதெல்லாம் இந்த பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமா கொட்டகையும், பொறியியல் தொழில் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்' என்று சொல்லி விட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/50&oldid=555774" இலிருந்து மீள்விக்கப்பட்டது