பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குறிஞ்சிமலர்

'நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா 5LDa)T?""

'மூச்சு விடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். நேற்று இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது பாவம்?'

'மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா; தன் முதுகுக்குப் பின்னால் உயிரைக் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன்! மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது? எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?"

'திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!"

'மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள், வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்."

'அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?"

'சொல்லவில்லைதான்; எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா; அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா; உன் சங்கிலி, இதைச் சரிப்படுத்தி விட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் வீட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/60&oldid=555784" இலிருந்து மீள்விக்கப்பட்டது