பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 63

கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின; வயிற்றுப் பசிக்கு வழி தேடின.

ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலி இல்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மன மில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்குக் கொடுக்க மனம் இல்லை. 'நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப்போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலு விதமாக இருக்கிற இடத்தில் வேலைபார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது' என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர் இலட்சணமாயில்லாவிட்டால் அதுவும் குறை: இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை. அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது! நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால் தானே விசாரிப்பதற்கு?

ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக் கோபுர வாசலும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.

அந்த இடத்தில் அது ஒரு நாற்சந்தி - தெற்கேயிருந்து ஒரு லாரியும் வடக்கேயிருந்து இன்னொரு லாரியும் மற்ற இருபுறமும் கார்களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடு வீதியில் அறுந்துவிழும் முல்லைக் கொடி போல் சாய்ந்து விட்டாள்.

இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்படி ஒர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/65&oldid=555789" இலிருந்து மீள்விக்கப்பட்டது