பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 குறிஞ்சி மலர் சிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகை சிரிப்பில் துன்பத்தின் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. "வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறிய போது அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூயநகையையும் இந்த துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிந்தித்தாள் பூரணி.

மெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அநுமானித்துக் கொண்டாள். தன் அதுமானத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக, 'இது தானப்ப முதலி தெருதானே?' என்று அம்மாளைக் கேட்டாள். "ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும்போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்கு கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள், விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது. வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையி லும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஒடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது: வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.

குழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.

'என்னம்மா இப்படிப் பார்க்கிறாய்? நான் வரும் போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரி இறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/70&oldid=555794" இலிருந்து மீள்விக்கப்பட்டது