பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6



வாசகர்களோ ‘மிக மிக நல்ல காரியம்’ என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தபடுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். ‘நல்லது செய்தோம்’ என்று பெருமைப்பட்டேன். கல்லுாரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின. சான்று கூறின.

சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி- கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு- இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும்.

இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும் படி அமைந்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்கே காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று.

தமிழ் இலக்கிய அறிவை ஒரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/8&oldid=1232625" இலிருந்து மீள்விக்கப்பட்டது