பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 குறிஞ்சி மலர் லிருந்து பார்த்தாலும், அறையிலிருந்து தெருவைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிகிற விதத்தில் அது அமைந்திருக்கிறது. வாசலில் வந்து நின்ற சிறிய காரிலிருந்து அச்சகத்தின் உரிமையாளர் போல் தோற்றமளிக்கும் முதியவர் ஒருவர் இறங்கி வேகமாக உள்ளே வருகிறார் முகப்பு அறைக்குள் நுழைகிறார்; மேஜையில் எதையோ தேடுகிறார். நோட்டுப் புத்தகம் போல் பெரிய டைரி ஒன்று விரிந்து கிடக்கிறது கண்ணாடியை மாட்டிக் கொண்டு எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார்; படிக்கப் படிக்க முகத்தில் சிடுசிடுப்பும் சீற்றமும் பரவுகின்றன.

'இந்தச் சமூகம் எங்கே உருப்படப் போகிறது? உச்சி வெய்யிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கை பார்க்கத்தான். எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா? பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழு கின்றனவே ஐயோ! என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம்! எல்லாம் வாழ்ந்த பெருமைகள் வாழ்கின்ற பெருமை ஒன்றுமில்லை.

இன்று என் கண்கள் இந்தத் தெருக்களில் எதைப் பார்க் கின்றன? ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழைமையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழுந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே! அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா? ஏன் விழுந்தாள்? யாரால் விழ நேர்ந்தது? அடே, அரவிந்தா! நீ கவிஞன். உன்னுடைய உள்ளம் இன்னுமா துடிக்கவில்லை? இதைக் கண்டுமா கொதிக்கவில்லை? பாடு, துடிப்பதெல்லாம் திரட்டி ஏதாவது பாடி வை! நீ அச்சாபீஸில் புரூப்' திருத்தப் பிறந்தவனா? இல்லை, இல்லவே இல்லை! நீ கவி உள்ளம் படைத்தவன். சமூகத்தைத் திருத்தி நேர் செய்யப் பிறந்தவன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/80&oldid=555804" இலிருந்து மீள்விக்கப்பட்டது