பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 83

டைரி எழுதுகிற பித்து அவனுக்கு அதிகம். டைரி என்ற பெயரில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப்புத்தகங்களைத் தைத்துப் பைண்டு செய்து வைத்துக் கொள்வான். ஒன்றில் பொன் மொழிகளாக குறித்து வைத்துக் கொள்வான். இன்னொன்றில் தனக்குத் தோன்றுகிறவரை அப்போதைக்கப்போவது கிறுக்கி வைத்துக் கொள்வான். மூன்றாவது நோட்டில் வரவு செலவு, அச்சக சம்பந்தமான நினைவுக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். இந்தக் கவி எழுதுகிற கிறுக்கு ஒரு நெறியாகவே அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. திடீர் திடீர் என்று வரும் அந்த வேகம் எங்கே உட்கார்ந்திருந்தாலும் , கையில் எந்தக் காகிதம் கிடைத் தாலும் அந்த வேகத்தை மனத்தில் தோன்றுகின்றபடி எழுத்தில் எழுதித் தணித்துக் கொண்டாக வேண்டும். நன்றாக முற்றி விட்ட ஆமணக்கினால் வெடிக்காமல் இருக்க முடியாது. அது போலத்தான் அரவிந்தனின் கவிதை வேகமும் எழுதாவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி ஒரு அழகிய வேகமாகும் அது. அச்சக முதலாளியின் நாற்காலியில் அவர் இல்லாத போது உட்கார்ந்து இது மாதிரி ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். மறந்து நோட்டுப் புத்தகத்தை அங்கேயே அவருடைய மேஜையில் வைத்துவிட நேர்ந்து, எதிர்பாராத சமயத்தில் அவரும் வந்து பார்த்து விட்டால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வான். அவரும் ஏதோ கோபத்தில் பேசி விடுவாரே ஒழிய மனதுக்குள், பயல் பிழைத்துக் கொள்வான். கொஞ்சம் மூளைக் கூர் இருக்கிறது, எதை எதையோ கிறுக்கி வைத்தாலும் கருத்தோடு அழகாக கிறுக்கி வைக்கிறானே என்று அவனைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுகிறவர் தான்.

மீனாட்சி சுந்தரம் உள்ளே மெஷின்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரவிந்தன் மனத்திலோ குடை பிடித்த மங்கையும் குமிண் சிரிப்பு முகமுமாக மத்தியானம் மயங்கி விழுந்த பெண் உலா வந்து கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து மெல்ல நழுவினான். மறுபடியும் முன்புற அறைக்கு வந்து ஒளித்து வைத்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து முதலில் எழுதியிருந்த கவிதை வரிகளுக்கு கீழே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/85&oldid=555809" இலிருந்து மீள்விக்கப்பட்டது