பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 குறிஞ்சி மலர்

கூறினாள்: பூரணி, சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும்போது பூரணி வந்தால், என் வீட்டுக்கு வரச்சொல் அவளை என்று என்னிடம் சொன்னாள்.'

'அது சரி காமு, அவள்தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு தம்பிகளையும், குழந்தையையும் எதற்காக அழைத்துக் கொண்டு போக வேண்டும்?'

'அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா! வண்டி வைத்து அழைத்துக் கொண்டு போனாள் பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும். '

இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள் என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்று கொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய கார்களையும், லாரிகளையும் முருகன் சந்நிதிக்குமுன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கரங்களுக்கும் நான்கு எலுமிச்சம் பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய கார்களை ஒட்டிக் கொண்டு போகும் அழகே அழகு. :

பூரணி கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புதுக்கார் கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புதுக்கார் வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக் கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா? அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/92&oldid=555816" இலிருந்து மீள்விக்கப்பட்டது