பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 குறிஞ்சி மலர்

போட்டாங்க. " மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக்கொள் வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா? குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்து விட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.

'இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்ட தற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா, உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, 'அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்' என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று, இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள்? எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்.'

'உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக் கிறதே? அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா?' என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.

'அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும்."

'ஊரில் என்ன காரியமோ?" பூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.

பூரணிக்குப் புரிந்து விட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி; -

'ஓ! அப்படியா செய்தி தை பிறக்கப் போகிறதல்லவா? இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/94&oldid=555818" இலிருந்து மீள்விக்கப்பட்டது