பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 குறிஞ்சி மலர் நினைக்கிறாய்? கேட்டு விட்டுச் சிரித்தாள் பூரணி. துன்பங் களைச் சீரணிக்கும் சிரிப்பு அது.

'அதுவா பேச்சு? ஏதோ உனக்கு வேலை கிடைக்கிற வரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக்கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி!"

'என்னவோ நீ சொல்கிறாய் கமலா, எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக் கொடுக்காமல் உதவுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஒட்டப்படுகிற ஜட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத் தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்."

தம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய்ச் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேஸ்வரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லி விட்டாள்.

கமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச்சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்கு களையும் ஒளிப் புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங் கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவதுகூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் 'ஓம்' சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற் போல் ஊரைச் சுற்றி இருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப் பரப்பு மின்னிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/96&oldid=555820" இலிருந்து மீள்விக்கப்பட்டது