பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 95

தன் பேச்சைக் கேட்டுக் கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் துங்கி விட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வர வில்லை. ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்கும் என்றைக்கு விடியப் போகிறதோ? முருகா! நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்து விடு! அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லை. உன்னுடைய ஊரில் உன் திருக்கோவிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத் தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டு விட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று, கைவிட்டு விடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.

பூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற் கண்டவாறு நெஞ்சுருகத் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக் கண்கள் உணர்ந்தன.

காரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற் போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் அரவிந்தன்' என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடிய வில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா? அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததாய் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/97&oldid=555821" இலிருந்து மீள்விக்கப்பட்டது