இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
35
மத்தாப்பூ கொளுத்துகையில் கோடி
வானவில்லின் சிலிர்ப்பளிக்கும் கூடி.
எத்தாட்சியின் தேர்தல் கொள்கை
எத்தனை வண்ணம்! நிலைக்கவில்லை.
முத்தொளியாய் அகல்எரிந்தது நாடி!
◯
வீரப்போரில் இறந்தது நல் அரிமா.
வீரம் பேசியே அரத்தம் குடிக்கும் நரிமா
சாரும் நோயால் சாவணைக்கையில்
சார்ந்த நரிகள் தேர்தல் எண்ணி
ஈரிரு கோடிச் செலவில் சென்றது வெறிமா!
◯
புரட்சி என்பது கட்டிளமைக் கூறு,
பொங்கி எழும் எரிமலையின் வீறு!
புரட்டருக்கு வெடிமருந்து
பொருளாளிக்குத் தாக்கும்படை
பொதுவுடைமைக் காரர்க்குக் காட்டாறு!
◯
அறிவுக்கொவ்வா திரைப்படத்தில் நடித்தான்
அரசியலில் அதிகார மது குடித்தான்:
வெறியனாகி நாடழித்தான்...
வீறிட்டெழுந்த மக்களின்முன்
சிறியனாகி தனது வாழ்வை முடித்தான்!