இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
37
பொருளில் இல்லை காண்பவரின் கண்ணில்,
பொங்கும்அழகு வாழ்கிறதாம் மண்ணில்!
கருத்துரைத்த அழகன், ஒருத்தி
காதலுக்காய் வீடு சென்றான்
குரைத்தது நாய் அழகன் உடல் புண்ணில்!
◯
இயற்கை வாழ்வை நீங்கிவிட்டால் தாய்,தான்
இழந்து விட்ட ஏதிலியாம் சேய்தான்.
செயற்கை நண்பர் சேர்க்கையாலும்
சிறுமைக்குரிய பழக்கத்தாலும்
மயற்கையிலே நமக்குறவு நோய்தான்!
◯
பகுத்தறிவும் அறிவியலும் காலம்
பற்றிவரும்; முன்னேறிடும் ஞாலம்.
தொகுத்தபழங் குப்பையுடன்
தோய்ந்திருப்பார் வாழ்வனைத்தும்
மிகு புயற்குக் குட்டிச்சுவர் கோலம்!
◯
ஏட்டினிலே போட்டு விட்டார் சட்டம்
எண்ணுாறு பேர் குழுவமைத்த திட்டம்;
நாட்டில் நடை முறையில் இல்லை
வீட்டினுக்கும் நன்மையில்லை
தீட்டியதால் கொழுத்தது அரசு மட்டம்!