பக்கம்:குறும்பா.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

61


தமிழ்த்தெய்வம் என்றுசிலை எடுத்தார்
தமிழாலயம் தலைநகரில் முடித்தார்,
தமிழியக்கம் கற்றறியான்
தலைவன் எனத் தமிழறியார் கொடுத்தார்!
தமிழால் வாழும் பெருச்சாளிகள்
தமிழ்ப்பயிரின் விளைவையுண்டு கொழுத்தார்!



"அன்பே சிவம்" முதலாளி சொன்னான்.
ஆலையிலே வேலைநிறுத்தம் பன்னாள்;
கொன்று குவிக்கக் காவல்வேண்டி
ஆளவந்தார் கூட்டுடனே நின்றான்.
வன்பே சிவம் ஆயிற்றங்கே
அன்பேசிவம் ஆயிரம்பேரைக் கொன்றான்!



எங்கள் ஊரின் அரசுத்துறை இயக்கி
எவரையுமே, புகழுரையால் மயக்கி,
இங்கிருந்து, மேலைநாட்டில்
‘இங்கிலீசில்’ தமிழ்ப்பண்பாட்டை முழக்கிப்
பொங்குபுகழ் கொணர்வேன் என்றான்!
புண்கொணர்ந்தான் பொய்மகளிர் முயக்கில்!



கடவுள் எப்போ வருவார் என்றாள் கிள்ளை
காணாதோடி விட்டார் என்றாள் செள்ளை.
இடக்குமடக்கு இசைமுழக்கம்,
எரிச்சலூட்டும் சமற்கிருதத் தொல்லை
அடங்கிடுமேல், அன்பின்உண்மை
அரும்பிடுமேல் இறைவன் நமது பிள்ளை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/64&oldid=1201087" இலிருந்து மீள்விக்கப்பட்டது