இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓணான் போலத் தலைதூக்கி
உடலை நெளித்துப் பார்த்திடுவான்;
ஆணோ பெண்ணோ வரக்கண்டால்
கை,கால் தூக்கி அழுதிடுவான்! 1
மண்ணைச் சுவரிற் பெயர்த்திடுவான்;
வாயில் வைத்துக் குதப்பிடுவான்;
கண்ணிற் கண்ட பொருளெல்லாம்
தாவித் தாவிப் பிடித்திடுவான்! 2
தஞ்சா ஆர்ச்சிறு பொம்மைபோல்
தலையை, உடலை ஆட்டிடுவான்;
பஞ்சு போன்ற செங்கையால்
பாயைத் தரையை அடித்திடுவான்! 3
நாயைக் கண்டால் நகர்ந்திடுவான்;
சோற்றைக் கண்டால் நகர்ந்திடுவான்;
தாயைக் கண்டாற் சிரித்திடுவான்;
தலையை ஆட்டி அழைத்திடுவான் 4
கட்டை விரலைச் சுவைத்திடுவான்
காலைத் தூக்கி உதைத்திடுவான்;
பிட்டு மாவைப் பிசைவார்போல்
மண்ணை வாரிப் பிசைந்திடுவான்! 5
86 ♦ கவிஞர் வாணிதாசன்