இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாய்மொழியே தமிழ்மொழியாம்! கண்டாய்!-அதைத்
தட்டாமல் நீபடிப்பாய் நன்றாய்!
காய்நிலவின் இனிமை நனிஉண்டு!-நாளும்
கற்றுணரக் கட்டிக் கற்கண்டு! 1
செந்தமிழோ தீங்கருப்பஞ் சாறு!-பள்ளி
சென்றுகற்கப் பொன்னிவள ஆறு
சொந்தமொழி தமிழ்மொழியைப் போல-உனக்(கு)
எந்தமொழி இனிமைதரும் கூறு? 2
கற்றவரே கண்ணுடையார் என்றும்!-கல்வி
கல்லாதார் புண்ணுடையார் இன்றும்!
உற்றபொருள் கல்வியல்லால் உண்டோ?-நாட்டில்
மற்றபொருள் நிலைத்திருப்ப துண்டோ? 3
குழந்தை இலக்கியம் ♦ 107