பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுக்கக் குறையாத பொருள்கல்வி!-என்றும்
கொள்ளக் குறையாத பொருள்கல்வி!
எடுக்கக் குறையாத பொருள்கல்வி!-மாற்றார்
எரிக்கக் குறையாத பொருள்கல்வி! 4

இளமையினில் கற்கை மிகநன்று-அந்த
இளமையினைப் போக்கி வீணேநின்று
வளமிழந்த பேர்கள் பலருண்டு!-மூத்த
வயதினிலும் படித்தாற் பயனுண்டு! 5

படித்துணரார் விளையாட்டுப் பொம்மை-ஏட்டுப்
படிப்பிலையேல் என்னுண்டாம் நன்மை?
அடுத்தடுத்து நீபடிக்க வேண்டும்!-நல்ல
அறிவுண்டாம் புகழ்உண்டாம் யாண்டும்! 6

கற்றபடி நீநடக்க வேண்டும்!-ஏட்டில்
கண்டகளை நீவிலக்க வேண்டும்!
பெற்றவர்கள் உனைக்கண்டு மகிழ்வார்-வேறு
பிறநாட்டார் உனைக்கண்டு புகழ்வார்! 7

படித்தபயன் அறிவோடு வாழ்தல்!-அந்தப்
பண்பிலையேல் உனக்குண்டாம் தாழ்தல்
படித்தவருக் கெந்நாடும் நாடே!-நன்னூல்
படியாதார்க் கெந்நாடும் காடே! 8

கல்வியினால் உலகம்முன் னேறும்!-இதைக்
காணும்பொருள் ஒவ்வொன்றும் கூறும்!
கல்வியினால் வாழ்வளிக்கக் கூடும்!-வான்
கதிர்நிலவைக் கைக்கொள்ளக் கூடும்! 9


108 ♦ கவிஞர் வாணிதாசன்