பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மங்கா ஒளியே! மலையிளங் காற்றே!
திங்கட் குழவி! செவ்வாய்க் குயிலே!
பொங்கல் அமுதே! புதுத்தைப் பூவே!
சிங்கத் தமிழர் தீந்தமிழ் வாழி!

5


கன்னடம் தெலுங்கு கவின்மலை யாளம்
உன்னிடம் பிறந்த துணர்ந்தேன்! வாழி!
தென்னிடம் சிறக்க வளர்ந்தோய்! வாழி!
செந்தமிழ் கொடுந்தமிழ் தந்தோய்! வாழி!

6


இத்தரைத் தமிழர்க் கேற்றம் சேர்த்த
எழிலே! மலையிடைப் பொழிலே! வாழி!
தித்திக்கும் தேனே! முத்தமிழ் அன்னாய்!
திரைகடல் தாண்டியும் பறந்ததுன் புகழ்க்கொடி!

7

வடக்கை வென்றாய்! மலைகடல் வென்றாய்!
பணிமுடி நெரித்தது கணக்கிடப் போமோ?
கிடக்கும் குமரிக் கீழ்நா டெங்கும்
அடக்கி ஆண்ட அரசே! வாழி!

8

முடிபுனை வேந்தர் மூவர் தம்மின்
மடியில் வளர்ந்த வரிக்குயில்! வாழி!
அடிமுடி காணா வான்கடல்! வாழி!
அன்னாய் தமிழே அன்னாய்! வாழி!

9


154 ♦ கவிஞர் வாணிதாசன்