இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பழக்கூடை இந்தா!-தமிழ்ப்
பழக்கூடை இந்தா!
அழுகாமல் உனைக்காக்கும் தற்காப்புக் கூழை!
அமிழ்து சுவைப்பலா மாங்கனி வாழை!
செழுந்தமிழ் கைவிட்டால் உனைச்சூழும் பீழை!
சிந்தித்துப் பாரடி வாழ்விக்கும் பொற்பேழை!
காவிப்பொன் பற்கள் நினைவூட்டும் மாதுளை!
கைக்குழந் தைமொழி யூட்டும் பலாச்சுளை!
ஆவி செழுந்தமிழ் ஆமோ மலைவாழை!
மாவை அணில்கோத ஆனோமே நாம்ஏழை!
வற்றாத கூடை மலர்பூத்த ஓடை!
மாத்தமிழ் தென்றல் தவழ்சோலை மேடை!
உற்று நினைத்துப்பார் உன்றன் தமிழ்வாழ்வே!
உன்வாழ்வு, உன்னினப் பெருவாழ்வு ஆகும்மே!
44 ♦ வாணிதாசன்