பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேச்சும் பாட்டும்

29

உபாத்தியாயரின் ஏகபோக உரிமை. சிறுவன் அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவனுக்கும் தனது குழந்தை உள்ளத்தின் உணர்ச்சியின்படி அபிப்பிராயம் உண்டென்பதைச் சாதாரணமாக அனைவரும் மறந்து விடுகிறோம். சிறுவன் அதை எவ்வாறு நோக்குகிறான், அவனுக்கு அவ்விஷயம் பற்றிய எண்ணம் யாது என்பனவற்றை நாம் அறியுமாறு வெளியிட அவனுக்குச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

பேச்சுச் சுதந்திரம் கொடுத்தால் சிறுவர்கள் அடங்கி யிருக்கமாட்டார்கள் என்ற பய உணர்ச்சியே இன்று மேலோங்கி நிற்கின்றது. ஆனால் அந்தப் பயத்திற்கு ஆதாரமே இல்லை. புது முறையிலே நடைபெறும் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தம் எண்ணங்களை வெளியிடும் உரிமை கொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி நடப்பதாகக் காணோம்.

சிறுவர்கள் கூறுவதெல்லாம் சரியாக இருக்குமென்று நான் சொல்ல வரவில்லை. தவறுகள் இருக்கலாம். ஆனால் பேச்சுரிமை கொடுப்பதாலேயே நாம் எளிதில் அத்தவறுகளை அறிந்துகொள்ள முடியும். பின்பு அவற்றைக் களையவும் வழி தேடலாம். வாக்குச் சுதந்திரமே இல்லாத இடத்தில், வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, இந்தச் சந்தர்ப்பம் வாய்ப்பதரிது. சிறுவனும் ஆழ்ந்து சிந்தித்து முடிவான எண்ணங்களை வெளியிடப் பழகிக்கொள்ள இயலாது. பிற்காலத்தில் அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்கவிருக்கும் வாக்குச் சுதந்திரத்தை அவன் சரியானபடி உபயோகிக்க வேண்டுமானால் சிறு வயது முதற்கொண்டே அதில் பயிற்சி பெற வேண்டும்.