பக்கம்:கைதி எண் 6342.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

இன்று மாலை, வழக்கம்போல் எங்கள் பகுதி நுழைவு வாயிலருகே, உட்கார்ந்துகொண்டிருந்தேன்; மூன்று புறாக்கள் ஒயிலாக உலவிக்கொண்டிருக்கக் கண்டேன். புறாக்களை வளர்ப்பதிலும் அவைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதிலும் எனக்கு மிகுந்த விருப்பம் என்பது பலருக்குத் தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, புறாக்களைக் கண்டபோது ஓடிச் சென்று அவைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விளையாடலாமா என்று கூடத் தோன்றிற்று. சிறை அதிகாரிகளிலே ஒருவருடைய புறாக்கள் அவை என்று கூறினார்கள். எங்களிடம் அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும், அதற்கான காரணமும்தான் எனக்குத் தெரிந்திருக்கிறதே! இந்நிலையில் புறாக்களைக் கேட்டால் கொடுக்கவா சம்மதிப்பார்கள். கொடுத்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் வெளியே வளர்க்கும் புறாக்கள் என்னிடம் மிக அன்பு காட்டும்: என் கரத்திலும் தோட்களிலும் தொத்திக் கொண்டு தீனி தின்பதிலே அவைகளுக்கு மிகுந்த விருப்பம். இங்கு, புறாக்கள் வளர்த்திட அனுமதி கிடைத்தால், மிக மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் இருக்கும் பகுதியில், பூனைகளும் அதிகமாக இல்லை; ஒரே ஒரு பூனைதான் உலவிக்கொண்டிருக்கிறது, அழகான பூனை, சாமான்கள் கிடங்கிலே இருக்கும் பூனை, மிகச் செல்லமாக வளர்க்கப்படுகிறது. ஆகவே அது வேட்டையாடும் போக்கைக்கூட மறந்துவிட்டது. காலையும் மாலையும், அசைந்து அசைந்து நடந்து வரும், புல்வெளிப்பக்கம் சில விநாடிகள் உலவி விட்டு, பொறுப்புள்ள அதிகாரி தமது அலுவலைக் கவனிக்கச் செல்வதுபோல, கிடங்குக்குச் சென்றுவிடும். ஆகவே புறாக்களுக்குப் பூனையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கூட இருக்காது; ஒரே ஒரு ஆபத்து—பெரிய ஆபத்து—இருக்கிறது! இங்குதான் பொன்னுவேல் இருக்கிறார். நான் சிறிது ஏமாந்திருந்தால் புறா, ஏப்பமாக மாறிவிடக்கூடும். அந்த ஒரு பயம்தான். வீணான எண்ணங்கள்!! சிறை அதிகாரிகளாவது எங்களுக்கு மனநிம்மதிக்கான உதவிகளைச் செய்வதாவது!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/113&oldid=1573236" இலிருந்து மீள்விக்கப்பட்டது