பக்கம்:கைதி எண் 6342.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

'கோட்டிக்கொளல்' என்ற சொற்றொடர், ‘அவை அறிதல்' அதிகாரத்தில் ஒரு குறளில் வருகிறது; நேற்று இரவும், இன்று பகலும், அந்தச் சொற்றொடருக்கான, பொருத்தமான பொருள்பற்றி எண்ணிப் பார்த்துத் தெளிவு பெறுவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக அன்பழகன் கூறினார்.

உலவி எனக்கு மகிழ்வளித்த புறாக்களைக் காணோம். சிறை அதிகாரி வீட்டு முற்றத்துக்கு அவை போய்ச் சேர்ந்தன என்கிறார்கள்.

கிளிகளே இங்கு இல்லையே என்பதுபற்றி இன்று அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு கிளிகள் சில வேளைகளில் பறந்து வருவதாகவும், தான் பார்த்ததாகவும் சொன்னார். அவர் சொன்னபடியே, இன்று ஐந்துமணி சுமாருக்கு, இரண்டு கிளிகள் பறந்து சென்றிடக் கண்டேன்.

காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தேர்தலில் தோல்வி கண்ட நண்பர் ராஜகோபால், இன்றுவரை, பரிமளத்தைக் காணக்கூட வரவில்லையாம். எங்கள் வீட்டுக்கும் வரவில்லையாம். விந்தையான இயல்பு! தேர்தல் தோல்வியை ஏதோ தன்னுடைய சொந்த மதிப்புக்கு ஏற்பட்டு விட்ட கேடு என்று எண்ணிக்கொண்டு மனதைக் குழப்பிக்கொள்வதுடன், தோல்வி காரணமாக எழும் எரிச்சலை எவர்மீதாவது காட்டும் இயல்பு சிலருக்கு இருக்கிறது. அந்த இயல்பின்படி ராஜகோபாலின் போக்கு அமைந்திருக்கிறது. மக்களாட்சி முறையிலே நம்பிக்கை உள்ள எவரும், தேர்தலிலே வெற்றி கிடைக்காமற் போய்விடுவதை பெரிய விபத்தாகவோ, தமது சொந்த தன்மானத்துக்கு ஏற்பட்டு விட்ட களங்கமென்றோ எண்ணிக்கொள்வது மிகத்தவறு. அந்தவிதமான எண்ணம் கொண்டு, தமது மனத்துக்குத் தாமே வேதனையைத் தேடிக்கொள்வது மிகமிகத் தவறு.

இன்று, பீடர்பெனின்சன் என்பவர் எழுதிய அடக்குமுறைபற்றிய ஏட்டிலே, ஒரு பகுதியைப் படித்தேன். மனதை உருக்கும் விதமான பிரச்சினை விளக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, உலகிலே, பல நாடுகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/119&oldid=1573243" இலிருந்து மீள்விக்கப்பட்டது