120
தாம் இருக்கும் நாட்டு துரைத்தனம் ஏற்றுக் கொள்ளாத சில கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்துக்காகக் கொடுமைப்படுத்தப்பட்ட ஒன்பது பேருடைய வரலாற்றுத் தொகுப்பு இந்தப் புத்தகம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எனும் புனிதமான உரிமைகளை ஆதிக்க அரசுகள் எப்படி அழிக்க முனைகின்றன என்பதை எடுத்துக்காட்டி எழுதப்பட்ட புத்தகம். ஒரு தூய கொள்கைக்காக அறப்போரில் ஈடுபட்டுச் சிறைப்பட்டுள்ள என்போன்றாருக்கு, இத்தகைய ஏடுகளைப் படிக்கும்போது, புதியதோர் உறுதி ஏற்படுவது இயற்கை. கொள்கைக்காக, ஆபத்துக்களைத் துரும்பென மதித்து, வாழ்க்கையிலே பெரும் பெரும் ஆபத்துக்களைத் தாமாக வருவித்துக்கொண்டவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நான் சிறையிலே அடைக்கப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பெரிதென்று கூற மனம் இடம் தராது. பலர் தமது கருத்துகளுக்காக, நெருப்பாற்றிலே நீந்தி இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளைப் படிக்கப் படிக்க, நாம் எத்தகைய இன்னலையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற உறுதி ஏற்படத்தான் செய்கிறது. தூய உள்ளத்துடனும், மனஉறுதியுடனும் அறப்போரில் ஈடுபட்டபடி இருக்கும் நமது கழகத் தோழர்களைப் பாராட்டியபடி, படுக்கச் செல்கிறேன்.
6—3—64
பறவைகளிலே சில, பொந்துகளிலே அடைபடச் செல்லாமுன்பே, எங்களை அறையில் கொண்டுவந்து அடைத்துவிட்டு, சிறைக் காவலாளிகள், 'அப்பா! தொல்லை தீர்ந்தது' என்று எண்ணிக்கொண்டு போய் விட்டனர். காலை முழுவதும் ஒருவரோடொருவர் பேசி, ஒன்றாக உலவிட இருந்த வாய்ப்பு, மாலை 6 மணிக்கெல்லாம் பறி போய்விடுகிறது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு, சிறை மேலதிகாரியிடம், மதி, நாங்கள் உள்ள பகுதியிலே உள்ள தனி இரும்புக்கம்பித் கதவை பூட்டிவிட்டு, எங்களை அறைகளிலே போட்டுப் பூட்டாமல் விட்டுவைக்கக் கூடாதா? முன்பு அவ்விதம் நிலைமை இருந்ததே என்று கேட்டார். "அது முன்பு!" என்று கூறிவிட்டுச் சென்றார்