121
சிறை மேலதிகாரி. அந்த சொற்றொடருக்கு எத்தனையோ ஆழ்ந்த பொருள் இருக்கத்தான் செய்கிறது. சிறையின் உட்புறப் பகுதியிலேதான் பெரும்பாலான 'கைதிகள்' உள்ளனர். அங்கு இரவு 9, 10 மணிவரையில் பாட்டும் பேச்சும் பலமாக இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதியில் ஆறுமணிக்கெல்லாம் அடைத்துவிடுகிறார்களே உடனே ஒரு சந்தடியற்ற நிலை ஏற்பட்டுவிடும். பலர், இரவு பத்து மணிக்குள் தூங்கிவிடுகிறார்கள்—எனக்கோ இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ!!
வழக்கம்போல, இன்றும் காலையிலே, சிறிதுநேரம், சமையல் காரியத்தில், பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன். சமையல்பொறுப்பு முழுவதும் பார்த்தசாரதியுடையதுதான், என்றாலும், இதையிதை இப்படி இப்படிச் செய்யலாம் என்று கூறுவதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. சிறையிலே சமையல் செய்வதற்குத் தனித் திறமை வேண்டும். வேக மறுக்கும் அரிசி, பருப்பு; காயாத விறகு சுவையும் மணமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்ட பண்டங்கள்; இவைகளைக்கொண்டு, "இன்னமுது" சமைப்பது என்றால் இலேசான காரியமல்ல. எண்ணெய் போதுமான அளவு இல்லை என்று தெரியவந்ததும், 'தாளிப்பு' ஒப்புக்கு என்றாகிவிடும். காய்கள் முற்றிப் போனதாக ஒவ்வொரு நாளைக்குத் தந்துவிடுவார்கள்—அன்று விதைகள் மிதக்கும் குழம்புதான் கிடைக்கும். என்றாலும், நாங்களே சமைத்துச் சாப்பிடுவதிலே ஒரு தனி மகிழ்ச்சி எழத்தான் செய்கிறது.
"நல்ல குடும்பத்திலேதான் பிறந்தேன்; நல்லபடிதான் வளர்த்துப் பெரியவனாக்கினார்கள்; நாலு பேர் என்பேச்சைக் கேட்டு நடக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கிராமத்தில்; அந்த நிலையிலுள்ள நான், இங்கு வந்து, கட்டுப்பட்டு, காவலுக்கு உட்பட்டு இருக்க வேண்டி நேரிட்டுவிட்டது" என்று நண்பர் ராமசாமி, இன்று பார்த்தசாரதியிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பேச்சுக்காக அவர் அவ்விதம் சொன்னாரே தவிர, சிறையிலே ஆர்வம் குன்றாமல் தான் இருக்கிறார்.
கை.—8