126
பொறுத்தவரையில், நமது கருத்து, அறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து அகமிக மகிழ முடிகிறது.
கல்வித்துறை வித்தகரும், ஆட்சித்துறை அனுபவம் கொண்டவரும், எந்தக் கேடு போகவேண்டும், கொடுமை நீக்கப்படவேண்டும் என்று எடுத்துக்கூறி, 'வாதாடி' இருக்கிறார்களோ, அதே நோக்கத்துக்காக, நாம் அறப்போரில் ஈடுபட்டு, சிறையில் கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொள்ளமுடிகிறது.
'துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறார்கள்' என்று நம் மீது பழி சுமத்தும் 'பரந்த மனப்பான்மை'யினர், ஓமந்தூரார் மனம் நொந்து பேசியிருப்பதையும், டாக்டர் இலட்சுமணசுவாமி மிகக் கண்டிப்பான குரலில் பேசியிருப்பதையும் கூர்ந்து கவனிப்பார்களானால், தமது நிலை எவ்வளவு கேவலமானதாகிறது என்பதை உணருவார்கள். வெளியில் இருந்து படிப்பதைவிட, சிறைக்கு உள்ளே இருந்துகொண்டு, அந்த இரு முதியவர்களின் பேச்சுகளையும் படிக்கும்போது, தனிச் சுவையும், எழுச்சியும் பெறமுடிகிறது.
7—3—64
பொதுவாழ்க்கைத் துறையில் ஈடுபட்டு, சிறைப்பட நேரிடுபவர்களுக்கெல்லாம், கைதிகளை நல்லவர்களாக்கும் முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது—சிறையில் இருக்கும்போது. சிறையில் பலவிதமான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களிடம், பழகவேண்டிய நிலை இருப்பதும், அந்த நிலை காரணமாக, அவர்களுடன் பேசி அவர்கள் 'கதை'யைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும், அவர்கள் கூறுவது கேட்டு மனம் இளகுவதும், இங்கு இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது. சிறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதுபற்றி, இன்று மாலை, பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார். பொன்னுவேல் உட்புறப் பகுதியில் இருந்த நாட்களில், தண்டனை பெற்று உள்ளே உள்ள கைதிகள், தமது தண்டனையைக் குறைக்கவேண்டு-