பக்கம்:கைதி எண் 6342.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

கூடாது என்று தடுக்கட்டும்—நியாயம்—ஆனால் குடும்பத்தாரின் நலன்பற்றி அறிந்துகொள்வதுமா தடுக்கப்பட வேண்டும்—நாகரிக நாட்களில்—அதிலும் அரசியல் கைதிகள் விஷயத்தில்.

இன்று அறையில் போட்டுப் பூட்டப்பட்டதும், இது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

கொள்கை காரணமாக கொடுமைக்கு ஆளானவர்கள் பற்றிய புத்தகத்தில், இன்று இருவருடைய வாழ்க்கை பற்றிப் படித்தேன். போர்ச்சுகீசிய ஆதிக்க வெறியின் கீழ் சிக்கிக்கிடக்கும் அங்கோலாவில், விடுதலை விரும்பிகள் எத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதை, டாக்டர் நெடோவின் வரலாறு காட்டுகிறது. தென் ஆப்பிரிக்க வெள்ளையர் ஒருவர் அங்கு தலைவிரித்தாடும் 'நிறவெறி'யை எதிர்த்து, அறப்போர் நடாத்துவது பற்றியும், அதன் காரணமாக அவருக்கு ஏற்படும் அவதிகள் பற்றியும், டன்கன் என்பவருடைய, வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற பொதுவிதியிலிருந்து, கொள்கைக்காகப் போரிடும் எவருக்கும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் விலக்கு இல்லை என்ற பேருண்மையை இந்த ஏடு விளக்குகிறது.

அஜந்தா—எல்லோரா ஆகிய இடங்களுக்குப் போய் வந்தது குறித்தும், சரவனபெலகோலா சென்று வந்தது பற்றியும், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பரோடா, சூரத், ஆமதாபாத் ஆகிய நகர்களின் நிலையைக் கண்டறிந்தது பற்றியும், சிறிது நேரம், பொன்னுவேல்—வெங்கா ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதிரே உள்ள 'சென்ட்ரல் ஸ்டேஷனையே ஆறு திங்கள் பார்க்க முடியாதபடி அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெய்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களைப்பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தது, ஒரு கேலிக்கூத்தல்லவா? சிறையிலே உள்ளவர்களின் சிந்தனை, வேகவேகமாக, நெடுந்தொலைவு சிறகடித்துக்கொண்டு பறந்து செல்வது இயல்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/131&oldid=1578474" இலிருந்து மீள்விக்கப்பட்டது