133
கவனம் செலுத்தவில்லை. படிப்பதிலே மட்டும் கவனம் செலுத்தினேன். வெல்ஸ் எழுதிய அந்தப் புத்தகத்தில், ஒரு ஆராய்ச்சியாளன் காதல் திருமணம் செய்துகொண்டு, காதலியின் மனம் மகிழத்தக்க நிலையைக் காண, ஆராய்ச்சித் துறையைவிட்டு விலகி, பொருள் ஈட்டும் வாணிபத்துறைக்குள் நுழைந்து, நிரம்பப் பொருள் ஈட்டி மனைவியை மந்தகாசமான வாழ்விலே ஈடுபடச் செய்து, மனைவி செல்வத்தின் பளபளப்பிலும் நாகரிகமினுக்கிலும் மூழ்கிவிட்டதால், காதலின்பம் பெறமுடியாமல் வேதனைப் பட்டு, செல்வம் கொந்தளிக்கும் சூழ்நிலையையே வெறுத்து, பணம் ஈட்டும் பணியில் வெறுப்படைந்து, கண்காணா இடம் சென்று, சிந்தனைச் செல்வத்தைப் பெறவேண்டுமென்று தீர்மானித்து, அது குறித்து மனைவியிடம் பேச, அவளும் வேண்டா வெறுப்புடன், அவனுடன் வரசம்மதம்தர, பனிக்காடு நிரம்பிய ஒரு தீவுக்குச் சென்று இருவர் மட்டும், செல்வம், நண்பர்கள், விருந்து கேளிக்கை எதுவும் அற்ற ஒரு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் விவரம் தரப்பட்டிருந்த கட்டம், நான் படித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, என் மனமும் பனிக்காடு சூழ்ந்த இடத்திற்குச் சென்றவன் அடையும் நிலையை அடைந்தது. கழகம்பற்றிய நினைவுகளும், இந்தி ஆதிக்கத்தை அகற்றும் அக்கறையற்று ஆட்சியாளர்கள் கழகத்தை எப்படி ஒழிப்பது என்பதிலேயே அதிகத் துடிப்புடன் இருப்பதுபற்றிய சங்கட உணர்ச்சியும், என் மனதைக் குடைந்திடும் நிலை.
நேற்று காலை, வழக்கறிஞர் நாராயணசாமி வந்திருந்தார்—கருணாநிதி நடராசன் சார்பாக, உயர்நீதி மன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூறிவிட்டுச் சென்றார்.
மாலை, நாவலரும் கருணாநிதியும் வந்திருந்தனர். இளங்கோவன், நான் கொண்டுவரச் சொல்லியிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
மேலவைகளுக்கு எவரெவரைக் கழகம் ஆதரிப்பது என்பதுபற்றி கருணாநிதியும், நாவலரும் கூறினர்.