134
சில சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக, ஒரு கருத்தையும் கூறினார்கள்.
பதில் ஏதும் கூறக்கூடிய நிலையிலும் இடத்திலும் நான் இல்லையே! எனவே 'நான் என்ன சொல்ல இருக்கிறது. நிலைமைக்குத் தக்கபடி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினேன்.
கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும், நான் என்னிச்சையாகவோ, எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ, மேற்கொள்வதில்லை; என்றாலும், எனக்கென்று ஏதேனும் ஒரு 'விருப்பம்' எழுகிறது என்றால், அதனை நிறைவேற்றி வைக்கும் விருப்பம் கழகத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை, பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்துவருகிறேன். வருந்தி என்ன பயன்! காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பலன்! நிலைமை அவ்விதம்—அவ்வளவு தான்!
ராணிக்கு இரண்டு மூன்று நாட்களாகக் ‘காய்ச்சல்' என்று இளங்கோவன் கூறினான். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் வேலைநிறுத்தக் கிளர்ச்சி செய்வதாகவும், கௌதமன் அதிலே ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றான்.
பிற்பகல், காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்துள்ள தோழர்கள், நாங்கள் இருக்கும் பகுதி அருகில் வந்திருந்து, பெரிய பெரிய வைக்கோற்போர்களைத் தலைமீது சுமந்துகொண்டு, உட்புறம் சென்றிடக்கண்டேன்—மெத்தச் சங்கடப்பட்டேன். அவர்கள் சிரித்த முகத்தோடுதான் இருந்தார்கள்—ஆனால், அரசியல் கைதிகள் என்னென்னவிதமாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பதைக் காணும்போது, வேதனையை அடக்கிக்கொண்டிருக்க முடியத்தான் இல்லை. என் மனம் என்னவோ போல் ஆகிவிட்டதற்கு இதுவும் காரணம். ஆகவேதான், குறிப்பு எழுதாமலேயே இருந்துவிட்டேன்.
இன்று, இரண்டு நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன். மனச்சங்கடம் அடியோடு போய்விடவில்லை