பக்கம்:கைதி எண் 6342.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தேவைப்படும்! அடுப்படியில் அமர்ந்திருக்கும்போது, நான் இதனை எண்ணாமலில்லை.

கிடைத்ததைப் பயன்படுத்துவது, இருப்பதற்கு ஏற்றபடி ஆக்கிக்கொள்வது, சேதமானதுபோக மீதமுள்ளதைப் பயன்படுத்திக்கொள்வது, என்பவைகளெல்லாம், இங்கே நான் பெற்றுள்ள பாடங்கள். வாழைப் பழத்தில் முன் பாகமோ, அடிப்பாகமோ, தளதளவென்று ஆகிவிட்டால், பழமே வேண்டாமென்று போட்டுவிடுகிறோம்—வெளியே! இங்கே? தளதளவென்று ஆகிவிட்ட பகுதியை நீக்கிவிட்டு மற்றதைப் பயன்படுத்திகொள்கிறோம்—இங்கு என்ன பழக்கடையா இருக்கிறது, இது வேண்டாம் வேறுகொடு என்று கேட்க? அதிலும் நான் கெட்டுப்போன பாகத்தைக்கூட வீணாக்கிவிடாமல், பறவைகள் கொத்தித் தின்னட்டும் என்று, அதற்கேற்ற இடமாகப் பார்த்துத்தான் போட்டு வைக்கிறேன். வடித்த சாதம் குழைந்து போய்விட்டால், அன்று தயிரன்னமாக்கப்படுகிறது; விறைத்துப்போய்விட்டால் புளிச்சாதம் ஆக்கப்படுகிறது; இன்று காலையில், சமையலிடத்தில் வாடி வதங்கிப்போய், சத்தற்ற நிலையில், 'வெண்டை' ஒரு குவியல் தனியாக இருந்தது—வீசி எறிய வேண்டியதுதான் என்றார் பார்த்தசாரதி. வேண்டாம் வற்றல் போடுவோம் என்று சொல்லி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் ஊறவைத்து, உலரவைத்திருக்கிறேன்—நாளையோ மறுநாளோ, வெண்டைக்காய் வற்றல் விருந்தாகப் போகிறது. இது, சாப்பாட்டுக்காக, நிலைமைக்குத் தக்கபடி நாம் மேற்கொள்ளவேண்டி வருகிற முறை. நமது கழகம், நாட்டுக்குப் புதிய பொலிவு நிலை சமைத்திட அமைந்திருக்கிறது; எத்தனை எத்தனை விதமான 'பக்குவம்' நாம் மேற்கொள்ளவேண்டும்; கற்றுக் கொள்ளவேண்டும். மேலவைத் தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்டுவிட்ட சில விரும்பத்தகாத நிலைமைகளைக் கண்டபோது, நான் இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். தூக்கிவாரிப் போடுவதுபோல, மேலவை உறுப்பினர் பதவியை, நண்பர் எம். ஜி. இராமச்சந்திரன் ராஜிநாமாச் செய்துவிட்டாராம், என்று இன்று மாலை மதியழகன் தன் தம்பியைப் பார்த்துவிட்டு வந்து தெரிவித்தார். திகைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/140&oldid=1578483" இலிருந்து மீள்விக்கப்பட்டது